அதானி விவகாரத்தில் மத்திய பாஜக அரசிடம் 4 கோரிக்கைகளை வலியுறுத்துவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக ரூ. 2,100 கோடி கொடுத்ததாக அதானி குழும தலைவர் கௌதம் அதானி, அதானி க்ரீன் எனர்ஜி செயல் இயக்குநர் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது நியூ யார்க் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அதானிக்கு எதிராக மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில் கூறியதாவது:
'அதானி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 4 கோரிக்கைகள் உள்ளன.
1. தொழிலதிபர் அதானி ஊழல், லஞ்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார். வேறு யாராக இருந்தால், இந்நேரம் அவர் விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டிருப்பார். எனவே, கௌதம் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
2. அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
3. அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதானி மீதுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும்.
4. கடைசியாக பாஜக, மத்திய அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் அதானியை பாதுகாப்பதை நிறுத்த வேண்டும். தவறான நிர்வாகம், பங்குச்சந்தை மற்றும் நமது சட்டத்தின் மீதான நம்பகத்தன்மை இல்லாமை போன்றவை இந்தியாவின் மதிப்பைக் குறைக்கின்றன' என்று கூறியுள்ளார்.