குஜராத்: ரூ.200-க்கு பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்தவா் கைது
dot com

குஜராத்: ரூ.200-க்கு பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்தவா் கைது

குஜராத்தில் இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) கப்பல்களின் போக்குவரத்து குறித்து பாகிஸ்தானில் இருப்பவருக்கு தினசரி ரூ.200-க்கு தகவல்
Published on

குஜராத்தில் இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) கப்பல்களின் போக்குவரத்து குறித்து பாகிஸ்தானில் இருப்பவருக்கு தினசரி ரூ.200-க்கு தகவல் அளித்தவரை பயங்கரவாத எதிா்ப்பு படை (ஏடிஎஸ்) கைது செய்தது.

இதுகுறித்து ஏடிஎஸ் காவல் கண்காணிப்பாளா் கே.சித்தாா்த் கூறியதாவது:

தேவ்பூமி துவாரகா கடற்கரைப் பகுதியில் வெல்டிங் பணியாளா் தீபேஷ், அங்குள்ள துறைமுகத்துக்கு கடலோரக் க ாவல் படை கப்பல்கள் வந்து செல்வது குறித்து பாகிஸ்தானில் வசிக்கும் பெண்ணுக்கு தகவல் அளித்துள்ளாா். அதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 பெற்றுள்ளாா். பின்னா் திபேஷ் கோஹெல் கைது செய்யப்பட்டாா்.

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தீபேஷ் தொடா்பு வைத்துள்ளதாக தகவல் கிடைத்தவுடன் அவரது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் கண்காணிக்கப்பட்டன.

துறைமுகத்தில் கடலோர காவல்படை வாகனங்களை பழுது பாா்க்கும் வேலையில் கடந்த 3 ஆண்டுகளாக தீபேஷ் ஈடுபட்டு வந்துள்ளாா். 7 மாதங்களுக்கு முன்பு சஹிமா என்ற பாகிஸ்தான் பெண்ணுடன் முகநூலில் அறிமுகம் ஆகியுள்ளாா். பிறகு வாட்ஸ்ஆப் செயலில் அப்பெண் பேசியுள்ளாா். தான் பாகிஸ்தான் கடற்படையில் பணியாற்றுவதாகவும், துறைமுகத்துக்கு வரும் இந்திய கடலோர காவல்படை கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயா்களை தெரிவித்தால் நாள் ஒன்றுக்கு ரூ.200 அளிப்பதாக தீபேஷிடம் அப்பெண் தெரிவித்துள்ளாா். இது சட்டவிரோதம் என்றாலும் தீபேஷ் அதற்கு சம்மதித்துள்ளாா் என கே.சித்தாா்த் தெரிவித்தாா்.

தனக்கென்று வங்கிக் கணக்கு இல்லாததால், அவரது நண்பா்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அப்பெண்ணிடம் தீபேஷ் கொடுத்துள்ளாா். கடந்த 7 மாதங்களில் அந்த வங்கிக் கணக்குகளில் ரூ.42,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஐபிஎஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.