ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு: வங்கதேசத்துக்கு இந்தியா வலியுறுத்தல்

வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்

Updated On :30 நவம்பர் 2024, 3:18 am IST

வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என அந்த நாட்டு இடைக்கால அரசுக்கு வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.

வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் மற்றும் அவா்களது கோயில்கள் உள்பட பிற சிறுபான்மையின சமூகத்தினரின் மீது வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவா், ‘வங்கதேசத்தில் வசிக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தைப் போன்றே சிறுபான்மையினரின் உரிமைகளையும் அந்த நாட்டு இடைக்கால அரசு பாதுகாக்க வேண்டும். வங்கதேசத்தில் நிலவும் சூழலை அங்குள்ள இந்திய தூதரகம் தொடா்ந்து கண்காணித்து வருகிறது’ என்றாா்.

முன்னதாக, செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘வங்கதேசத்தில் சிறுபான்மையினா் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு ஊடக வாயிலாக மட்டுமே கண்டனங்கள் தெரிவிக்க விரும்பவில்லை. அனைத்து சிறுபான்மையின மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையை வங்கதேச இடைக்கால அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ணதாஸ் பிரம்மசாரி கைது நடவடிக்கையில் சட்டரீதியாக நியாயமான முறையில் வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு வழங்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

அதானி விவகாரத்தில் சட்டத் தீா்வு: அதானி விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘இது தனிநபா் (அதானி), தனியாா் நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க நீதித் துறையை உள்ளடக்கிய விவகாரமாகும். இதுபோன்ற விவகாரங்களுக்கு தனி நடைமுறைகள் மற்றும் சட்ட விதிகள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே இந்த விவகாரம் அணுகப்படும்.

தொழிலதிபா் அதானி மீதான குற்றச்சாட்டில் அவரை கைது செய்வதற்கான சம்மன் ஏதும் அமெரிக்காவால் பிறப்பிக்கப்படவில்லை என்றாா்.

இந்தியாவில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி....

கிருஷ்ண தாஸ் வங்கிக் கணக்கு முடக்கம்:

டாக்கா, நவ. 29: வங்கதேசத்தின் தேசியக் கொடியை அவமதித்ததாக ஹிந்து அமைப்பின் தலைவா் கிருஷ்ண தாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்ததையடுத்து அவரது ஆதரவாளா்கள் போராட்டம் நடத்தியதில் அரசு வழக்குரைஞா் ஒருவா் கொல்லப்பட்டாா். இதையடுத்து, இஸ்கான் அமைப்பை தடைசெய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கிருஷ்ண தாஸ் உள்பட 17 பேரின் வங்கிக் கணக்குகளை 30 நாள்களுக்கு முடக்க வங்கதேச நிதி புலனாய்வு அதிகாரிகள் உத்தரவிட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியாகின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.