
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து நாளை(அக். 4) வெளியேற உள்ளதாக ஆம் ஆத்மி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் தில்லி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த அரவிந்த் கேஜரிவால் ரவிசங்கர் சுக்லா லேனில் உள்ள ஆம் ஆத்மி தலைமையகத்திற்கு அருகில் உள்ள மண்டி ஹவுஸ் அருகே ஃபெரோஸ்ஷா சாலையில் உள்ள பஞ்சாப் மாநிலங்களவை எம்பி அசோக் மிட்டலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தனது குடும்பத்துடன் நாளை குடியேற உள்ளார்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பதவியை வகிக்கும் வகையில் கேஜரிவாலுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ வீட்டை ஒதுக்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்தது.
கடந்த இரு வாரங்களாக புதிய இல்லத்தைத் தேடும் முயற்சியில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்கிறது.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் 155 நாள்கள் சிறைக்குப் பின்னர் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதன்பின்னர் தில்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்களிடமிருந்து நேர்மைக்கான சான்றிதழைப் பெறுவதற்காக முதல்வர் பதவியை கேஜரிவால் ராஜிநாமா செய்தார். அடுத்தாண்டு பிப்ரவரியில் நிகழ உள்ள தில்லி பேரவைத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையை வென்று மீண்டும் முதல்வராகப் பதவியேற்க உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.