
ஸொமாட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல் உணவு விநியோகம் செய்துள்ளார்.
களநிலவரத்தை அறிந்துகொள்ளும் வகையில் இந்த முயற்சியை அவர் மேற்கொண்ட நிலையில், ஓர் உண்மைச் சம்பவம் அவருக்குத் தெரியவந்தது.
வணிக வளாகங்களில் உள்ள மின்தூக்கியைப் (லிஃப்ட்) பயன்படுத்த உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதுதான் அந்த உண்மைச் சம்பவம்.
ஹரியாணாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஸொமாட்டோ நிறுவனம் உணவுகளை வாடிக்கையாளர்களின் இருப்பிடம் தேடிச் சென்று விநியோகம் செய்யும் சேவையைச் செய்து வருகிறது.
ஸொமாட்டோவின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல், தனது மனைவி கிரேஸியா மெளனாவுடன் இணைந்து உணவு விநியோகம் செய்துள்ளார். முதல் ஆர்டரை முடித்த பிறகு, இரண்டாவது ஆர்டரைக் கொடுக்கச் சென்றுள்ளார்.
தில்லியில் உள்ள கலெக்ட் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆம்பியன்ஸ் வணிக வளாகத்தின் உணவகத்தில் உணவு சேகரிக்க வேண்டியிருந்தது. அங்கு ஸோமாட்டோ உடையில் உணவு பையுடன் சென்றபோது, வணிக வளாகத்தில் இருந்த மின்தூக்கியைப் பயன்படுத்த அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுகளைப் பயன்படுத்தி ஆர்டர் எடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஓராண்டு நிறைவு! இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்!
பின்னர் படிக்கட்டுகளில் பயணித்து வாடிக்கையாளர் முன்பதிவு செய்திருந்த உணவை வாங்கிக்கொண்டு புறப்பட்டுள்ளார். இந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் தீபிந்தர் கோயல் பகிர்ந்துள்ளார்.
உணவு விநியோகம் செய்ததை அவரின் மனைவி விடியோ பதிவு செய்துள்ளார். அந்த விடியோவைப் பகிர்ந்து அவர் தெரிவித்துள்ளதாவது,
''எனது இரண்டாவது ஆர்டரின் போது, வணிக வளாகத்தின் மின் தூக்கியைப் பயன்படுத்த நான் அனுமதிக்கப்படவில்லை. உணவு விநியோகம் செய்யும் அனைத்து ஊழியர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்த, வணிக வளாகங்களுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ந்தேன். மேலும், வணிக வளாகங்களில் உணவு விநியோகம் செய்பவர்களிடம் அதிக மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும்'' என தீபிந்தர் பதிவிட்டுள்ளார்.
தீபிந்தரின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். தனது நிறுவனத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களின் துயரத்தை அறிந்து, உணர்ந்து அதனைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கும் தீபிந்தர் செயல் பாராட்டுக்குரியதே என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.