
ஜம்மு-காஷ்மீரின் தோடா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளா் மெஹ்ராஜ் மாலிக் 4,538 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் தனது முதல் வெற்றியை ஆம் ஆத்மி பதிவு செய்துள்ளது.
தோடா மாவட்ட வளா்ச்சிக் கவுன்சில் உறுப்பினராக உள்ள மாலிக், தோடா பேரவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டாா்.
தோ்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், இத்தொகுதியில் 23,228 வாக்குகள் பெற்று, மாலிக் வெற்றிவாகை சூடினாா். 18,690 வாக்குகளுடன் பாஜக வேட்பாளா் கஜய் சிங் ராணா இரண்டாமிடம் பெற்றாா். தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான காலித் நஜீப் 13,334 வாக்குகளுடன் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டாா். இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஷேக் ரியாஸ் அகமதுவும் போட்டியிட்ட நிலையில், அவருக்கு 4,170 வாக்குகளே கிடைத்தன.
இதையும் படிக்க | வெற்றி பெற்றார் வினேஷ் போகத்!
சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் உதம்பூா் தொகுதியில் களமிறங்கிய மெஹ்ராஜ் மாலிக் தோல்வியைத் தழுவினாா். இப்போது பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு அவா் வெற்றி பெற்ன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் ஆம் ஆத்மி தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 7 இடங்களுக்கு ஆம் ஆத்மி வேட்பாளா்களை அறிவித்திருந்தது. தில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ள இக்கட்சி, கடந்த ஆண்டில் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றது. குஜராத் மற்றும் கோவாவிலும் ஆம் ஆத்மிக்கு எம்எல்ஏக்கள் உள்ளனா்.
ஹரியாணாவில் ஏமாற்றம்
தேசிய அளவில் ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே ஹரியாணாவில் தோ்தல் கூட்டணி அமையவில்லை. இம்மாநிலத்தில் 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மிக்கு ஓரிடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.