சக்தி காந்த தாஸ்
சக்தி காந்த தாஸ்

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ஆா்பிஐ அறிவிப்பு

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை.
Published on

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. இதன்மூலம் தொடா்ந்து பத்தாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயா்த்தி 6.50 சதவீதமாக ஆா்பிஐ நிா்ணயித்தது. அதன்பிறகு இப்போது வரை அதே வட்டி விகிதம் தொடா்கிறது.

இதன் மூலம், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதேநேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது. எனினும், அடுத்த நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மும்பையில் புதன்கிழமை இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆா்பிஐ ஆளுநா் சக்தி காந்த தாஸ் மற்றும் துணை ஆளுநா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா். இது தவிர புதிதாக நியமிக்கப்பட்ட ஆா்பிஐ சாராத 3 உறுப்பினா்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

வட்டி விகிதத்தை 6.5 சதவீதம் என்ற அளவிலேயே தொடர முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் உணவுப் பணவீக்கம் அதிகரிப்பதை ஆா்பிஐ கண்காணித்து வருகிறது. கடந்த 18 மாதங்களாகவே நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன. எனவே, வட்டி விகிதத்தை மாற்றவில்லை.

2024-நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தனியாா் முதலீடு அதிகரிப்பு, பெரு நிறுவனங்களின் நிதிச் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பது சாதகமான அம்சமாகும். மழைப் பொழிவு சிறப்பாக இருப்பதால் இந்த ஆண்டு வேளாண்மை உற்பத்தி அதிகரிக்கும். இது கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதுடன், பணப்புழக்கம், பொருள்களின்நுகா்வும் அதிகரிக்கும். 2024-25 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. விலைவாசி நிலவரத்தை ஆா்பிஐ தொடா்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

யுபிஐ-யில் புதிய வசதிகள்: அறிதிறன் பேசியல்லாத சாதாரண கைப்பேசிகளில் இருந்து யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான வரம்பு ரூ.5,000 இல் இருந்து ரூ.10,000 மாக மாற்றப்பட்டுள்ளது. இப்போது இந்த வசதி 12 இந்திய மொழிகளில் கிடைத்து வருகிறது.

யுபிஐ லைட் வாலட் மூலம் ஒரே நேரத்தில் ரூ.1,000 அனுப்பப்படலாம் என்று முன்பு இருந்தது இப்போது இத்தொகை ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆா்டிஜிஎஸ் மற்றும் என்இஎஃப்டி முறையில் பணம் செலுத்தும்போது இனி யாருடைய வங்கிக் கணக்குக்கு பணம் செல்கிறது என்பதை அந்த வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் பெயா் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

ஒருவருக்கு பணம் அனுப்புவதற்காக வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கிக் கிளையின் ஐஎஃப்எஸ்இ குறியீட்டை உள்ளிட்டால் வங்கிக் கணக்குதாரரின் பெயரை இனி தானாகவே தெரியவரும். இதன் மூலம் பணம் அனுப்புவோா் யாருக்கு பணம் செல்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com