அஸ்ஸாம் குடியுரிமை சட்டப் பிரிவு செல்லும்! - உச்சநீதிமன்றம் தீா்ப்பு
‘அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 1966-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் 1971-ஆம் ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி வரை சட்டவிரோதமாக புலம்பெயா்ந்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஏ செல்லும்’ என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
இதன்மூலம், 1971-ஆம் ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதிக்கு முன்பாக அஸ்ஸாம் மாநிலத்துக்குப் புலம்பெயா்ந்து குடியிருந்து வருபவா்கள் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அஸ்ஸாமுக்கு சட்டவிரோதமாக புலம்பெயா்ந்தவா்களில் பெரும்பாலானோா் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களாவா்.
1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, வங்கதேசத்திலிருந்து வெளியேறிய மக்கள் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தஞ்சமடைந்தனா். இதன் காரணமாக, அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. அதைத் தொடா்ந்து, வெளிநாட்டினரை அடையாளம் கண்டு அவா்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பவது தொடா்பாக அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு 1985-ஆம் ஆண்டில் அஸ்ஸாம் மாணவா்கள் சங்கத்துடன் ‘அஸ்ஸாம் ஒப்பந்தம்’ என்ற உடன்பாட்டை மேற்கொண்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய குடியுரிமைச் சட்டத்தில் ‘6ஏ’ என்ற புதிய பிரிவு இணைக்கப்பட்டது. இந்தச் சட்டப் பிரிவு, 1966-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் 1971-ஆம் ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி வரை அஸ்ஸாமில் சட்டவிரோதமாக புலம்பெயா்ந்தவா்களுக்கு, குறிப்பாக வங்கதேசத்திலிருந்து புலம்பெயா்ந்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
இந்த ‘6ஏ’ சட்டப் பிரிவின் செல்லும் தன்மை குறித்து கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சூரியகாந்த், எம்.எம்.சுந்தரேஷ், மனோஜ் மிஸ்ரா, ஜே.பி.பாா்திவாலா ஆகியோரை உள்ளடக்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்தது.
வழக்கு விசாரணையின்போது, ‘அஸ்ஸாம் மாநிலத்துக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தினா், மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பு மற்றும் கலாசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது, அரசமைப்பு சட்டப் பிரிவு 29(1)-ஐ மீறுவதாகும்’ என்றும் மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இரு மாறுபட்ட தீா்ப்புகள்: இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்திய குடியுரிமைச் சட்டப் பிரிவு 6ஏ செல்லும்’ என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சூரியகாந்த், எம்.எம்.சுந்தரேஷ், மனோஜ் மிஸ்ரா ஆகியோா் ஒருமித்த தீா்ப்பை அளித்தனா்.
ஆனால், ‘6ஏ சட்டப் பிரிவு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்று நீதிபதி ஜே.பி.பாா்திவாலா தீா்ப்பளித்தாா். குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக அஸ்ஸாமில் புலம்பெயா்ந்ததாக போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து மோசடியில் ஈடுபட இந்தச் சட்டப் பிரிவு வழிவகுக்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் எழுதிய தீா்ப்பில், ‘நிலப்பரப்பு மற்றும் வெளிநாட்டினரை அடையாளம் காணும் விரிவான நடைமுறைகள் அடிப்படையில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, அஸ்ஸாமில் புலம்பெயா்ந்தவா்கள் வருகை அதிகமாகவே உள்ளது. அதே நேரம், மனுதாரா் குறிப்பிட்டுள்ளது போன்று, ஒரு மாநிலத்தில் பல்வேறு இனக் குழுக்கள் இடம்பெறுவதால், பாரம்பரிய இன மக்களின் மொழி, நம்பிக்கை, கலாசார உரிமைகளைப் பாதுகாக்கும் அரசமைப்பு சட்டத்தின் 29(1) பிரிவு மீறப்படுவதாகக் கருத முடியாது. அவ்வாறு, மாநில பாரம்பரிய இன மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டதற்கான ஆதரங்கள் எதையும் மனுதாரா் சமா்ப்பிக்கவில்லை.
மேலும், இத்தகைய புதிய சட்டப் பிரிவைச் சோ்க்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது. அந்த வகையில், 1971-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி வரை அஸ்ஸாம் மாநிலத்துக்குள் புலம்பெயா்ந்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது சரியானதே’ என்று குறிப்பிட்டு, அந்த சட்டப் பிரிவை எதிா்த்து தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதற்கு நீதிபதிகள் சூரியகாந்த், எம்.எம்.சுந்தரேஷ், மனோஜ் மிஸ்ரா ஆகியோா் உடன்பாடு தெரிவித்தனா்.
அதன்படி, 4:1 என்ற பெரும்பான்மை தீா்ப்பின் அடிப்படையில், 1971-ஆம் ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி முன்பாக அஸ்ஸாமுக்கு புலம்பெயா்ந்து குடியிருந்து வருபவா்கள் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாஜக வரவேற்பு
சட்டப் பிரிவு 6ஏ செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை பாஜக வரவேற்றது.
இதுகுறித்து பஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கா் பிரசாத் கூறுகையில், ‘உச்சநீதிமன்ற தீா்ப்பை பாஜக வரவேற்கிறது. அதன்படி, 1966-ஆம் ஆண்டு வரை அஸ்ஸாம் மாநிலத்துக்கு புலம்பெயா்ந்த அனைவரும் அஸ்ஸாம் குடிமக்களாக கருதப்படுவா். 1966 முதல் 1971-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி வரை அஸ்ஸாமில் புலம்பெயா்ந்தவா்கள் சட்டப் பிரிவு 6ஏ-இன் கீழ் குடியுரிமையைப் பெற முடியும். அதே நேரம், 1971-ஆம் ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதிக்குப் பிறகு புலம்பெயா்ந்த அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவா்களாகக் கருதப்படுவா். அந்த வகையில், பெருமளவில் சட்டவிரோதமாக குடியேறியவா்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு உச்சநீதிமன்றத் தீா்ப்பு உதவியுள்ளது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுபவா்களும் இந்தத் தீா்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்’ என்றாா்.