புதிய நீதி தேவதை!! கண்களில் கருப்புத் துணி இல்லை!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை திறக்கப்பட்டது பற்றி...
புதிய நீதி தேவதை சிலை
புதிய நீதி தேவதை சிலைபடம்: எக்ஸ்
Published on
Updated on
2 min read

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நூலகத்தில் திறக்கப்பட்ட கண்களுடன், அரசியல் சாசன புத்தகத்தை ஏந்திய ‘நீதி தேவதை’ சிலையை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் புதன்கிழமை திறந்து வைத்தார்.

காலனித்துவ பாரம்பரியத்தை அகற்றும் முயற்சியாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் கருப்புத் துணியால் கண்கள் கட்டப்பட்டு, கையில் வாளுடன் இருந்த பழைய நீதி தேவதை சிலை அகற்றப்பட்டுள்ளது.

பழைய சிலை

நீதி தேவதையின் கண்கள் மூடப்பட்டதற்கான காரணம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், நீதி என்பது பணம், அரசியலுக்கு அப்பாற்பட்டது, இது எதுவும் நீதியை பாதிக்கக் கூடாது என்பதாகும்.

மேலும், நீதி தேவதையின் இடது கையில் உள்ள வாள், வரலாற்று ரீதியில் அநீதியை தண்டிக்கவும், அதிகாரத்தை நிலை நாட்டுவதையும் குறிக்கிறது.

பழைய சிலை
பழைய சிலை

புதிய சிலையில் செய்யப்பட்ட மாற்றங்கள்

புதிதாக திறக்கப்பட்டுள்ள நீதி தேவதை சிலையின் இடது கையில் வாளுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தகம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நீதி தேவதை கண்ணில் கட்டப்பட்டிருந்த கருப்புத் துணியும் அகற்றப்பட்டு, கண்கள் திறந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீதியை வழங்குவதற்கு வாள் தேவையில்லை, அரசியலமைப்பு சாசனம்தான் தேவை என்பதை புதிய நீதி தேவதை சிலை குறிக்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பழைய சிலையின் வலது கையில் இடம்பெற்றிருந்த தராசு, புதிய சிலையிலும் இடம்பெற்றுள்ளது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலனை செய்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை திராசு குறிக்கிறது.

மேலும், புதிய நீதி தேவதை சிலையின் நெற்றியில் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டங்கள் பெயர் மாற்றம்

காலனித்துவ முறையை மாற்றும் வகையில், சில மாதங்களுக்கு முன்னதாக குற்றவியல் சட்டங்களின் பெயர்களை பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதிநியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

டி.ஒய். சந்திரசூட் ஏற்படுத்திய மாற்றங்கள்

கடந்த 2022-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற டி.ஒய். சந்திரசூட், நீதித் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

அரசியலமைப்பு அமர்வின் விசாரணை யூடியூபில் நேரலையில் ஒளிபரப்புவது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணைகளை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயற்கை மொழி செயலாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது எனப் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com