
நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஆனால், சாலை விபத்துகளால் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாக மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
3 நிமிடங்களுக்கு ஒரு உயிரிழப்பு
நாடு முழுவதும் கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும், சாலை விபத்துகளில் கிட்டத்திட்ட 1.73 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். சராசரியாக ஒரு நாளொன்றுக்கு 474 பேரும், ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒருவரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மாநிலங்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு சாலை விபத்துகள் குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்த தொடங்கியதில் இருந்து, கடந்தாண்டே அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
மேலும், கடந்தாண்டு சாலை விபத்துகளில் 4.63 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். இது 2022-ஐ ஒப்பிடுகையில் 4 சதவிகிதம் அதிகமாகும்.
கடந்த 2022-ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 1.68 லட்சம் பேர் உயிரிழந்ததாக சாலைப் போக்குவரத்து அமைச்சகமும், 1.71 லட்சம் பேர் உயிரிழந்ததாக தேசிய குற்றப் பதிவு ஆணையமும் அறிக்கை வெளியிட்டிருந்தன. 2023-க்கான அறிக்கையை இதுவரை இரு துறைகளும் வெளியிடவில்லை.
அதிகரிக்கும் உயிரிழப்புகள்
கடந்த 5 ஆண்டுகள் தரவுகளை ஒப்பிடுகையில், கரோனா ஊரடங்குக்கு பிறகு 2021ஆம் ஆண்டு முதல் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களும் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
2021-ல் 4.12 லட்சம் விபத்துகள் ஏற்பட்ட நிலையில், 1.54 லட்சம் உயிரிழப்பும், 3.84 லட்சம் பேருக்கு காயமும் ஏற்பட்டுள்ளன. 2023-ல் 4.8 லட்சம் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 1.73 லட்சம் உயிரிழப்பும், 4.63 லட்சம் பேர் காயமும் அடைந்துள்ளனர்.
இதில், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2023ஆம் ஆண்டில் சாலை விபத்து உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
அதேவேளையில், கேரளம், ஆந்திரம், பிகார், தில்லி மற்றும் சண்டீகரில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்தாண்டு குறைந்துள்ளன.
தமிழகம் இரண்டாமிடம்
உத்தரப் பிரதேசத்தில் 23,652 பேரும், தமிழகத்தில் 18,347 பேரும், மகாராஷ்டிரத்தில் 15,366 பேரும் சாலை விபத்துகளால் கடந்தாண்டு உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் பட்டியலில் தமிழகம்(72,292) முதலிடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசம்(55,769) மற்றும் கேரளம்(54,320) அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
தலைக்கவசம் அணியாத 70% பேர் மரணம்
2023-ஆம் ஆண்டில் விபத்தில் உயிரிழந்தவர்களில் கிட்டத்திட்ட 76,000 பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆவர். அவர்களின் 70 சதவிகிதம் பேர் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்று போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நகர்ப்புற வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைப்பதை கட்டாய விதிமுறையாக கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டதால் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் குறைத்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.