
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், திங்கள்கிழமை இரவு நேரிட்ட பட்டாசு விபத்தின்போது, பலூன்போல வந்த நெருப்புப் பிழம்பை பார்த்தவர்கள் அதனை அதிர்ச்சியோடு விவரிக்கிறார்கள்.
அஞ்சூட்டம்பலம் வீரர்காவு நிகழ்ச்சியின்போது, ஏராளமானோர் கூடியிருந்த திருவிழாவில் வெடிக்க வைத்திருந்த பட்டாசுகள் ஒரே நேரத்தில் வெடித்து விபத்துக்குள்ளானதில் 150 பேர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அதாவது, திருவிழாவின்போது, வெடிக்க வைத்திருந்த பட்டாசுக் குவியலின் மீது, வெடித்த பட்டாசு தீ ஒன்று விழுந்திருக்கலாம் என்றும், அதனால், அங்கிருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்தபோது, எழுந்த தீப்பிழம்பு, ஒரு பலூன் விரிவதைப் போல எழுந்து மக்கள் மீது விழுந்த விடியோ காட்சிகள் வெளியாகி, பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இதனை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ஒரு பயங்கர சப்தம் கேட்டது, அதனைத் தொடர்ந்து தீப்பிழம்பு உருவாகி எங்களை நோக்கி வந்தது. ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமானோர் நின்றிருந்தனர். அவர்களால் நினைத்தால் கூட எங்கும் ஓட முடியாத அளவுக்குக் கூட்டம். பிறகு அங்கு என்ன நடந்தது என்றே புரியாத அளவுக்கு மோசமாக மாறியிருந்தது. உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணி தொடங்கியது என்கிறார்கள்.
ஒரு குடிலுக்குள், சீனப் பட்டாசுகள் நிரப்பிவைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் புஸ்வானம் வைத்தபோது, அதிலிருந்து ஒரு தீப்பொறி பட்டாசு வைக்கப்பட்டிருந்த குடிலுக்குள் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்கிறார்கள்.
பட்டாசு வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகே பட்டாசுகளை வெடித்தது மிகவும் தவறு என்றும் அங்கிருந்தவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.