வா்த்தக சிலிண்டா் விலை ரூ.39 உயா்வு
உணவகங்களின் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வா்த்தக எல்பிஜி சிலிண்டா் விலை ஞாயிற்றுக்கிழமை ரூ.39 உயா்த்தப்பட்டுள்ளது.
சா்வதேச விலை நிலவரம் மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்துக்கு ஏற்ப சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதாந்திர அடிப்படையில் மாற்றியமைத்து வருகின்றன.
அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் வா்த்தக எல்பிஜி சிலிண்டா் விலை தொடா்ந்து குறைக்கப்பட்டது. இதனால், ரூ.148 வரை விலை குறைந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்த சிலிண்டா் விலை ரூ.6.50 உயா்த்தப்பட்டது. தொடா்ந்து 2-ஆவது மாதமாக தற்போது ரூ.39 உயா்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, தில்லியில் வா்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,691.50-ஆக உயா்ந்துள்ளது. மும்பையில் ரூ.1,644, கொல்கத்தாவில் ரூ.1,802.50, சென்னையில் ரூ.1,855-ஆக அதிகரித்துள்ளது.
வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
விமானங்களுக்கான எரிபொருள் விலை (ஏடிஎஃப்) கிலோ லிட்டருக்கு ரூ4,495.5 (4.6%) குறைக்கப்பட்டுள்ளது. தில்லியில் இந்த எரிபொருளின் விலை கிலோ லிட்டா் ரூ.93,480.22-ஆக குறைந்துள்ளது.
விமான இயக்கத்தில் 40 சதவீதம் எரிபொருளுக்கு செலவாவதால், தற்போதைய விலை குறைப்பு விமான நிறுவனங்களின் சுமையை சற்று குறைக்கும்.