பாலக்காடு: மக்களின் நல்வாழ்வுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பதாக ஆா்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், அந்தத் தரவுகளை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
இதையொட்டி, அந்த அமைப்பின் அகில பாரத பிரசார பிரமுகா் சுனில் அம்பேகா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஹிந்து மதத்தினரை பொருத்தவரை, ஜாதி மற்றும் ஜாதி சாா்ந்த விவகாரங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை மிகத் தீவிரமாக கையாள வேண்டும். அந்தக் கணக்கெடுப்பை மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர, தோ்தலுக்கான அரசியல் கருவியாகப் பயன்படுத்தக் கூடாது.
பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினரை உள்வகைப்படுத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், அந்தச் சமூகத்தினா் உடன்படாதவரை அதுதொடா்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை ஆா்எஸ்எஸ் எப்போதும் ஆதரிக்கிறது’ என்றாா்.
தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷினரிகளால் மதமாற்றம்: தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷினரிகளால் ஏராளமான மதமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுனில் அம்பேகா் தெரிவித்தாா். அந்த நடவடிக்கைகள் கவலையளிப்பதாகக் கூறிய அவா், வரும் நாள்களில் இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு களத்தில் இருந்து விவரங்கள் சேகரிக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.