ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளநிலையில், "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியான, ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பிரதமர் நரேந்திர மோடி நடத்துவாரா?' என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
"ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை.
ஆனால் அந்தத் தரவுகள் மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, அரசியல் ஆதாயங்களுக்கான கருவியாகப் பயன்படுத்தப்படக் கூடாது' என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்தது.
இதற்கு பதில் கூறும் வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், "ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் போதனை சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது. அத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்படுவதை நிராகரிக்கும் அதிகாரம் அந்த அமைப்புக்கு உள்ளதா என்பது முதல் கேள்வியாகும்.
ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு அனுமதி அளிக்க ஆர்எஸ்எஸ் யார்? தேர்தல் ஆதாயத்துக்காக அந்தக் கணக்கெடுப்பு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று அந்த அமைப்பு கூறுவதன் அர்த்தம் என்ன? ஆர்எஸ்எஸ் அமைப்பு என்ன நீதிபதியா அல்லது நடுவரா?
தலித்துகள், ஆதிவாசிகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகியோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை அகற்ற அரசியல்சாசன சட்டத்திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் மௌனம் சாதிப்பதன் மர்மம் என்ன?
தற்போது ஆர்எஸ்எஸ் பச்சைக்கொடி காட்டி விட்டதால், எங்கள் கட்சியின் (காங்கிரஸ்) மற்றொரு வாக்குறுதித் திட்டத்தை கடத்திச் சென்று, ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பிரதமர் நரேந்திர மோடி நடத்துவாரா? என்று ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் "ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஆதரிக்கிறோமா, எதிர்க்கிறோமா என்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பு தெளிவுபடுத்த வேண்டும். நாட்டின் அரசியல்சாசனத்துக்கு பதிலாக மனு ஸ்மிருதியை ஆதரிக்கும் சங் பரிவார் அமைப்புகள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோரின் பங்களிப்பைப் பற்றி கவலைப்படுகின்றனவா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.