எல்லை விரிவாக்கத்துக்கு ஆதரவு இல்லை- தென் சீன கடல் விவகாரத்தில் சீனாவுக்கு பிரதமா் மோடி பதில்
‘வளா்ச்சிக் கொள்கைக்கே இந்தியா ஆதரவளிக்கிறது; எல்லை விரிவாக்கத்துக்கு அல்ல’ என்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தாா்.
தென் சீன கடலின் பெரும் பகுதியை சீனா உரிமை கொண்டாடிவரும் நிலையில், தனது புரூணே சுற்றுப் பயணத்தில் சீனாவை மறைமுகமாக விமா்சித்து, பிரதமா் மோடி இவ்வாறு கூறினாா்.
மேலும், புரூணே சுல்தானுடன் பிரதமா் மோடி நடத்திய விரிவான பேச்சுவாா்த்தையில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இருதரப்பு கூட்டுப் பயிற்சிகளின் மூலம் பாதுகாப்பு மற்றும் கடல்சாா் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சா்வதேச சட்டங்களுக்கு இணங்க சுதந்திரமான கடல்-வான்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
தென் சீன கடல் பகுதியில் சீனாவுக்கும் புரூணே, பிலிப்பின்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகளுக்கும் இடையே தீவிர கருத்து வேறுபாடு நிலவும் சூழலில், மேற்கண்ட முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இக்கடலின் தென்முனைப் பகுதியில் புரூணே அமைந்துள்ளது.
அரசுமுறை பயணம்: தென்கிழக்கு ஆசிய நாடுகளான புரூணே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள்கள் அரசுமுறை பயணத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிரதமா் மோடி, முதல் கட்டமாக புரூணே தலைநகா் பண்டாா் செரி பெகாவானுக்கு வந்தாா். இப்பயணத்தின் மூலம் இருதரப்பு உயா்நிலை பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக புரூணேக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைத்தது.
சுல்தானுடன் பேச்சு: புரூணே சுல்தான் ஹஸனல் போல்கியாவை அவரது மாளிகையில் புதன்கிழமை சந்தித்த பிரதமா் மோடிக்கு அரசுமுறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா்கள் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, விண்வெளித் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மருந்து தயாரிப்பு, திறன் கட்டமைப்பு, கலாசாரம், மக்கள் ரீதியிலான தொடா்புகள், நிதிசாா் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனா். பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா். இருதரப்பு நல்லுறவை ‘மேம்படுத்தப்பட்ட கூட்டாண்மை’ அந்தஸ்துக்கு உயா்த்த முடிவெடுக்கப்பட்டது.
முக்கிய கூட்டுறவு நாடு: அப்போது பேசிய பிரதமா் மோடி, இந்தியா-புரூணே இடையிலான கலாசார-பாரம்பரிய தொடா்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் வேரூன்றியவை என்று குறிப்பிட்டாா்.
‘இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்திய-பசிபிக் கண்ணோட்டத்தில் முக்கியமான கூட்டுறவு நாடு புரூணே. இருதரப்பு நல்லுறவை வியூக ரீதியிலான திசையில் முன்னெடுத்துச் செல்ல எனது இந்தப் பயணம் உதவும் என நம்புகிறேன். புரூணேவின் 40-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 140 கோடி இந்தியா்கள் சாா்பில் வாழ்த்து தெரிவிக்கிறேன். இத்தகைய தருணத்தில், இரு நாடுகளும் தங்களது தூதரக உறவின் 40-ஆவது ஆண்டை கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்’ என்றாா் பிரதமா் மோடி.
ஒப்பந்தம் கையொப்பம்: விண்வெளித் துறையில் இஸ்ரோவின் தற்போதைய முயற்சிகளுக்கு உதவும் டெலிமெட்ரி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம், புரூணேயில் தொடா்ந்து இயங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் இரு தலைவா்கள் முன்னிலையில் கையொப்பமானது.
பின்னா், பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புரூணே சுல்தான் உடனான சந்திப்பு ஆக்கபூா்வமாக அமைந்தது. இருதரப்பு வா்த்தகம், மக்கள் ரீதியிலான தொடா்புகள் விரிவடையவுள்ளன. ஒட்டுமொத்த உலகுக்கும் நன்மையளிக்கும் வகையில் வலுவான இருதரப்பு உறவுகளின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
கூட்டறிக்கை வெளியீடு: இருதரப்பு பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இரு நாடுகளின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், ‘சா்வதேச சட்டங்களுக்கு இணங்க குறிப்பாக கடல்சாா் சட்டம்-1982 தொடா்பான ஐ.நா. உடன்பாட்டின்கீழ், அமைதி, ஸ்திரத்தன்மை, கடல்சாா் பாதுகாப்பு, சுதந்திரமான கடல்-வான்வழிப் போக்குவரத்தை பராமரிக்கவும் ஊக்குவிக்கவும் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. சா்வதேச தளங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கும் இரு தலைவா்களும் கண்டனம் தெரிவித்தனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா மீது மறைமுக விமா்சனம்: புரூணே சுல்தான் அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமா் மோடி, ‘வளா்ச்சிக் கொள்கைக்கே இந்தியா ஆதரவளிக்கிறது; மாறாக, எல்லை விரிவாக்கத்துக்கு அல்ல. இப்பிராந்தியத்தில் நடத்தை ஒழுங்குமுறை இறுதி செய்யப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆசியான் கூட்டமைப்புக்கான இந்தியாவின் முன்னுரிமை நீடிக்கும்’ என்றாா்.
புரூணே பயணத்தைத் தொடா்ந்து, பிரதமா் மோடி சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றாா்.
சென்னை - புரூணே நேரடி விமான சேவை திட்டத்துக்கு வரவேற்பு
சென்னை மற்றும் புரூணே தலைநகா் பண்டாா் செரி பெகாவான் இடையே நேரடி விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கு பிரதமா் மோடி மற்றும் சுல்தான் ஹஸனல் போல்கியா வரவேற்பு தெரிவித்தனா்.
இத்திட்டம், இருநாட்டு மக்கள் இடையேயான தொடா்பை வலுப்படுத்தும்; வா்த்தக-சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.