திரிபுரா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பை மீறி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் முடிவில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இந்த நிலையில், திரிபுராவின் 18 ஆவது மக்களவையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாக, பேரவைத் தலைவர் பிஸ்வாபந்து சென் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தீர்மானத்தை அவைத் தலைவர் படிக்கத் தொடங்கியபோது, எதிர்க்கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்டின் தலைவர் ஜிதேந்திர சௌத்ரி உள்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுதீப் ராய் பர்மன், கோபால் சந்திர ராய் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக, உள்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் உள்பட மற்ற அமைச்சர்களும் `விஸ்வ குரு’ என்று முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தற்காலிகமாக வெளிநடப்பு செய்தனர். இருந்தபோதிலும், மக்களவைத் தலைவரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தில் கூறப்பட்டதாவது ``சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில், வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களுக்கும், திரிபுரா சட்டப்பேரவை தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறது. இந்த வெற்றி இந்தியாவின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டது.