நாட்டின் மிகப் பணக்கார பெண் தொழிலதிபர்களில் முன்னிலையில் இருக்கும் சாவித்ரி ஜிண்டால், ஹரியாணா மாநில பேரவைத் தேர்தலில் ஹிசார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடவிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாவித்ரி ஜிண்டாலின் மகன் நவீன் ஜிண்டால் பாஜக எம்பியாக உள்ளார். இந்த நிலையில், ஹரியாணா பேரவைத் தேர்தலில் சாவித்ரிக்கு பாஜக இடம் கொடுக்காததால் அவர் சுயேச்சையாக போட்டியிடவிருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில், ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சரான சாவித்ரி ஜிண்டால், 10 ஆண்டுகள் ஹிசார் எம்எல்ஏவாக இருந்தவர், இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். ஃபோர்ப்ஸ் இந்தியா இந்த ஆண்டு வெளியிட்ட பணக்கார பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் சாவித்ரி ஜிண்டாலும் இடம்பிடித்திருந்தார். இவரது சொத்து மதிப்பு ரூ.100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹரியாணா மாநில தேர்தல்
ஹரியாணா மாநிலத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், செப்டம்பர் 4ஆம் தேதி பாஜக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. ஆனால், ஹிசார் தொகுதியிலிருந்து பாஜகவின் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கமல் குப்தா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிசார் தொகுதியில் தனக்கு வாய்ப்பு கொடுக்காததால் சுயேச்சையாக போட்டியிட சாவித்ரி முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானதுக்குப் பிறகு பல்வேறு விமர்சனங்களை பாஜக சந்தித்து வருகிறது. இந்த நிலையில்தான், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் ஹரியாணா அமைச்சர்கள் ரஞ்சித் சிங் சௌதாலா மற்றும் எம்எல்ஏ லஷ்மன் தாஸ் நாபா பாஜகவிலிருந்து வெளியேறிவிட்டனர். தப்போது, ரஞ்ஜித் சுயேச்சையாக போட்டியிடுவார் என்று கூறியுள்ளார்.
நாபாவும் பாஜகவிலிருந்து வெளியேறி சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.