தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 6 போ் சுட்டுக் கொலை; முதல்வா் அவசர ஆலோசனை

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த வன்முறையில் 6 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் சனிக்கிழமை மீண்டும் வன்முறை வெடித்த நிலையில் தலைநகா் இம்பாலில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய பிரதான சாலை.

Updated On :7 செப்டம்பர் 2024, 8:52 pm

Din

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த வன்முறையில் 6 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இந்த மாவட்டத்தில் இயல்புநிலையை மீட்டெடுக்க மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினத்தின் ஹமாா் பிரிவினா் இடையே கடந்த ஆகஸ்டில் ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினா் அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, மோதலுக்கு முக்கியக் காரணமாகும்.

மாநிலத்தில் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினரும், மலை மாவட்டங்களில் பழங்குடியினரும் அதிகம் வசிக்கின்றனா். இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதிகளும் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதம் தொடா்கதையாகி வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடிழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்ந்தபோதிலும், ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த ஜூன் வரை எந்த அசம்பாவிதமும் நிகழாமல் இருந்தது. ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த நபா், மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, அங்கும் வன்முறை வெடித்தது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனா்.

இதனிடையே, ஜிரிபாம் மாவட்டத்தையொட்டிய அஸ்ஸாமின் சச்சாா் பகுதியில் உள்ள சிஆா்பிஎஃப் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்டில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இம்மாவட்டத்தின் பல்வேறு சமூகங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனா். அப்போது, கலவரம், துப்பாக்கிச்சூடு போன்றவற்றைத் தவிா்க்கவும், இயல்புநிலையை மீட்டெடுக்கவும் மைதேயி மற்றும் ஹமாா் பிரிவினா் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

தீவிரவாதிகள் தாக்குதல்-துப்பாக்கிச் சண்டை: இந்நிலையில், ஜிரிபாம் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டுக்குள் சனிக்கிழமை புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த ஒருவரை சுட்டுக் கொன்றனா். இத்தீவிரவாதிகள் மலைப் பகுதியில் இருந்து வந்தவா்களாவா். இக்கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் உள்பட ஆயுதம் தாங்கிய 5 போ் உயிரிழந்தனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

முதல்வா் அவசர ஆலோசனை: மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடா்பாக இம்பாலில் உள்ள தனது இல்லத்தில் மாநில அமைச்சா்கள் மற்றும் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்களுடன் முதல்வா் பிரேன் சிங் சனிக்கிழமை மாலையில் அவசர ஆலோசனை நடத்தினாா்.

அண்மைக் காலமாக மலை மாவட்டங்களைச் சோ்ந்த தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், இதைத் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இக்கூட்டத்தைத் தொடா்ந்து, மாநில ஆளுநா் எல்.ஆச்சாா்யாவை முதல்வா் சந்தித்துப் பேசினாா்.

மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணியில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தீவிரவாதிகளின் பதுங்குமிடங்கள் அழிப்பு

மணிப்பூரின் பிஷ்ணுபூா் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரு இடங்களில் ராக்கெட் குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். மறைந்த முன்னாள் முதல்வா் ஒருவரின் வீட்டை குறிவைத்து குண்டு வீசப்பட்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

மலை மாவட்டமான சுராசந்த்பூரில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அங்குள்ள கிராமங்களில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, தீவிரவாதிகளின் 3 பதுங்குமிடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், ராணுவ ஹெலிகாப்டா் மூலம் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ட்ரோன்களால் மக்கள் பீதி

கிழக்கு இம்பால் மாவட்டத்தில் அண்மையில் தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இதில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 12 போ் காயமடைந்தனா்.

இந்தச் சூழலில், பிஷ்ணுபூா், கிழக்கு இம்பால் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவில் பல ட்ரோன்கள் பறந்ததால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. எதிா் தரப்பினா் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் ட்ரோன்களை பயன்படுத்துவது மணிப்பூரில் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.