
ஹிந்தி மொழி நாளில், நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மொழி என்பது, உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கான கருவி, அதனை பிடுங்கி எறிய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் எவ்வாறு உணர்வு என்பது இருக்கிறதோ, அதுபோலவே மொழியிலும் இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஹிந்தி மொழியுடனான தனது உறவை வெளிப்படுத்தும் விதமாகப் பேசுகையில், நான் அவ்வப்போது நினைத்துப்பார்த்திருக்கிறேன், ஒருவேளை, எனக்கு ஹிந்தி புரியாமல் போயிருந்தால், நான் எவ்வாறு மக்களை அடைந்திருப்பேன், அவர்களுடன் பேசியிருப்பேன்? தனிப்பட்ட முறையில் ஹிந்தி மொழியின் பலத்தை நான் உணர்ந்தே இருக்கிறேன் என்றார்.
மேலும், ஹிந்தி தாய்மொழியாக இல்லாமல் இருந்தும், ஹிந்தி மொழியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நமது நாட்டில், ஹிந்தி மொழி இயக்கமானது, சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி, லோகமான்ய திலகர், ராஜகோபாலாச்சாரி போன்றவர்களின் தாய்மொழி ஹிந்தியாக இல்லாத போதும், மொழியைப் பாதுகாக்கவும், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக இவர்கள் ஓய்வின்றி உழைத்துள்ளனர். இதுதான் நமக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
மேலும், தாய்மொழி என்ற அடிப்படையில், ஒவ்வொரு மாநிலமும், தனித்தனியாக விலைமதிப்பற்ற பொக்கிஷங்களைக் கொண்டிருக்கிறது. அவை அனைத்தையும் ஒன்றிணைப்பது எவ்வாறு? இதற்கான முயற்சியில், ஹிந்திதான் ஒரு இணைப்புச்சங்கிலியாக செயல்படுவதற்கு ஏற்றது, இதற்கான பணியில், ஹிந்தி மொழியை பலப்படுத்துவது மிகவும் முக்கியம், அப்போதுதான் நமது இலக்கை அடைய முடியும் என்று தெரிவித்திருந்தார் மோடி.