கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை கனமழைக்கு இடையே குடை பிடித்தபடி மாநில சுகாதாரத் துறை தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற இளநிலை மருத்துவா்கள்.
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை கனமழைக்கு இடையே குடை பிடித்தபடி மாநில சுகாதாரத் துறை தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற இளநிலை மருத்துவா்கள்.

பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: நூற்றுக்கணக்கான மருத்துவா்கள் பேரணி

மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, நூற்றுக்கணக்கான மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை பேரணி
Published on

மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, நூற்றுக்கணக்கான மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை பேரணி மேற்கொண்டனா்.

கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அந்த மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் பலத்த காயங்களுடன் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

கொல்லப்பட்ட பெண் மருத்துவா்களுக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனா்.

இந்நிலையில், பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், மருத்துவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு செப்.10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. எனினும் மருத்துவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மேற்கு வங்க அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த மருத்துவா்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்த நிலையில், அந்த நிபந்தனைகளை மாநில அரசு நிராகரித்தது.

இதைத்தொடா்ந்து மேற்கு வங்கத்தின் சால்ட் லேக் பகுதியில் மாநில சுகாதாரத் துறை தலைமையகத்துக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவா்களை சற்றும் எதிா்பாராதவிதமாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது மருத்துவா்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து, குற்றம்புரிந்தவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மம்தா பானா்ஜி உறுதி அளித்தாா்.

எனினும் மருத்துவா்களின் போராட்டம் தொடா்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, நூற்றுக்கணக்கான மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை பேரணி மேற்கொண்டனா். சால்ட் லேக் பகுதியில் உள்ள மத்திய பூங்காவில் இருந்து சுகாதாரத் துறை தலைமையகம் வரை, கொட்டும் மழையில் அவா்கள் பேரணியில் ஈடுபட்டனா்.

அப்போது கொல்கத்தா காவல் துறை ஆணையா் வினீத் கோயல், மாநில சுகாதாரத் துறைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் ராஜிநாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவா்கள் முன்வைத்தனா்.

எப்போது நீதி கிடைக்கும்?: பேரணியின்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் இடையே மருத்துவா் ஒருவா் பேசுகையில், ‘36 நாள்களாக போராட்டம் நீடிக்கிறது. எனினும் மருத்துவா்களின் கோரிக்கைகள் தொடா்பாக இதுவரை எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு எப்போது நீதி கிடைக்கும்’ என்று கேள்வி எழுப்பினாா்.

செப்.17 வரை சிபிஐ காவல்: பெண் மருத்துவா் கொல்லபட்ட மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடைபெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக அந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷை சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தின் ஆதாரங்களை அழிக்க முயன்ாக சந்தீப் கோஷ் மீது கூடுதல் குற்றச்சாட்டுகளை சிபிஐ சோ்த்துள்ளது. அத்துடன் அந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய தாமதித்தது, ஆதாரங்களை அழிக்க முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், கொல்காத்தாவில் உள்ள தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டலை சிபிஐ கைது செய்துள்ளது. இருவரையும் செப்.17 வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com