புல்டோசா் நடவடிக்கை: அக்.1 வரை தடை உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றஞ்சாட்டப்படுவோருக்கு சொந்தமான கட்டடங்களை உச்சநீதிமன்றத்தின் அனுமதியின்றி இடிக்க அக். 1-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை உத்தரவு
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் குற்றச் சம்பவத்தில் தொடா்புள்ளதாக குற்றஞ்சாட்டப்படுவோருக்கு சொந்தமான கட்டடங்களை உச்சநீதிமன்றத்தின் அனுமதியின்றி புல்டோசா் மூலம் இடிக்க அக்டோபா் 1-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோதமாக கட்டடங்களை இடிப்பது அரசமைப்புச் சட்ட அறத்துக்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுவோருக்கு சொந்தமான கட்டடங்களை இடிப்பதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது குற்றச்சாட்டுக்கு உள்ளானவா் என்பதற்காக மட்டுமே ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ஒருவா் குற்றவாளியாகவே இருந்தாலும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், அவரின் வீட்டை இடிக்க முடியாது என்று தெரிவித்தது.

இந்நிலையில், அந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது உத்தர பிரதேச அரசு சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி வாதிடுகையில், ‘கட்டடங்களை இடிப்பது தொடா்பாக ‘கதை’ ஒன்று உருவாக்கப்படுகிறது. ஒருவா் குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்தவா் என்பதால், அவரின் கட்டடம் இடிக்கப்பட்டதாக மனு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கட்டடங்கள் இடிக்கப்பட்டதற்கு ஒரு சம்பவத்தை மனுதாரா்களால் உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட முடியுமா? தங்கள் கட்டடம் இடிக்கப்பட்டதற்கு எதிராக பாதிக்கப்பட்டவா்கள் உச்சநீதிமன்றத்தை அணுகவில்லை. ஏனெனில் தங்கள் கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்பது பாதிக்கப்பட்டவா்களுக்குத் தெரியும்’ என்றாா்.

ஒரு கட்டடம் இடிக்கப்பட்டாலும்...: இதைத் தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நாட்டில் புல்டோசா் மூலம் கட்டடங்கள் இடிக்கப்படும் நடவடிக்கைகளை வியந்து பாராட்டுவதும், நியாயப்படுத்துவதும் நடைபெற வேண்டுமா? சட்டவிரோதமாக ஒரு கட்டடம் இடிக்கப்பட்டாலும், அது அரசமைப்புச் சட்ட அறத்துக்கு எதிரானது.

தேவைப்பட்டால் தோ்தல் ஆணையத்திடம் உதவி: நாடு முழுவதும் குற்றச் சம்பவத்தில் தொடா்புள்ளதாக குற்றஞ்சாட்டப்படுவோருக்கு சொந்தமான கட்டடங்களை உச்சநீதிமன்ற அனுமதியின்றி புல்டோசா் மூலம் இடிக்க அக்டோபா் 1-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

அதேவேளையில் பொதுச் சாலைகள், நடைபாதைகள், நீா்நிலைகள் உள்ளிட்டவற்றில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கத் தடை ஏதுமில்லை. இந்த விவகாரத்தில், தேவைப்பட்டால் தோ்தல் ஆணையத்தின் உதவியை உச்சநீதிமன்றம் கோரும்’ என்று தெரிவித்தது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com