உச்சநீதிமன்ற அனுமதியின்றி இந்தியாவில் எங்கும் கட்டடங்களை இடிக்கக் கூடாது!
நீதிமன்றத்தின் அனுமதியின்றி இந்தியாவில் எந்தப் பகுதிகளிலும் அக். 1 வரை கட்டடங்களை இடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவானது, சாலைகள் மற்றும் நடைப்பாதைகளில் அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது.
உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் புல்டோசர் நடவடிக்கைக்கு எதிராக ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகின்றது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றியே கட்டடங்கள் இடிக்கப்படுவதாகவும், குறிப்பிட்ட சமூகத்தை குறிவைப்பதாக கூறுவது தவறான கருத்து என்றும் வாதிட்டார்.
தொடர்ந்து, நீதிபதிகள் பேசியதாவது:
“நீதிமன்றத்துக்கு வெளியே குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுகிறார்களா? இல்லையா? என்ற விவாதத்துக்கு நாங்கள் செல்லமாட்டோம். சட்டவிரோதமாக கட்டடங்கள் இடிக்கப்பட்டால், அது அரசியலமைப்புக்கு எதிரானது.
சட்டவிரோத கட்டுமானத்துக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். நிர்வாகிகள் நீதிபதிகளாக முடியாது. கட்டுமானங்களை இடிப்பதற்கான செயல்முறை விதிகளை சீரமைக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதுவரை நாட்டின் எந்தப் பகுதிகளிலும் கட்டடங்களை இடிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
புல்டோசர் தண்டனை: உச்சநீதிமன்றம் சாடல்
முன்னதாக, கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி, குஜராத்தை சேர்ந்த ஜாவேத் அலி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது குடும்பத்தை சேர்ந்தவர் மீது காவல்துறையினர் ஒரு வழக்கு பதிந்ததால், எங்களது வீட்டை இடிப்பதற்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவரது வீட்டை புல்டோசர் கொண்டு இடிக்க இயக்க முடியாது என்று தெரிவித்து நகராட்சி நிர்வாகத்தின் நோட்டீஸுக்கு தடை விதித்தது.
மேலும், “குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா, இல்லையா என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்தின் வேலை. இந்த நாடு சட்டத்தால் ஆளப்படுகிறது. புல்டோசர் தண்டனையை நீதிமன்றத்தால் புறக்கணிக்க முடியாது” என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.