கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட நபரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கேரளத்தின் மலப்புரத்தில் சில நாள்களுக்கு முன்பு வெளிநாடு சென்று திரும்பிய நபர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் போனதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட காரணத்தால், அவரை மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரின் உடலில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அங்குள்ள மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய தலைநகர் தில்லியில் கடந்த வாரம் 26 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர் தில்லி எல்என்ஜேபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கடந்த ஜூலை 2022 முதல் இந்தியாவில் பதிவாகியுள்ள 30 குரங்கு அம்மை பாதிப்புகளைப் போலவே இதுவும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பாதிப்பு என்று குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை, உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ள குரங்கு அம்மையின் கிளேட் 1 வகைமை பாதிப்பினால் பொது சுகாதார அவசரநிலையின் கீழ் வராது என்று குறிப்பிட்டிருந்தது.
தில்லியில் பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு கிளேட் 2 வகைமை பாதிப்பு இருப்பதாக சோதனையில் தெரிய வந்ததாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
ஆப்ரிக்காவின் பல நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு பரவி வருவதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் இரண்டாவது முறையாக சர்வதேச பொது சுதாகார அவசரநிலையை அறிவித்தது.
சமீபத்தில் நிபா வைரஸ் தொற்று காரணமாக 24 வயது இளைஞர் பலியானதைத் தொடர்ந்து சுகாதாரம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டத்தைத் தொடர்ந்து தற்போது சந்தேகத்திற்குரிய குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது.
மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்துவந்த சிறுவன் கடந்த ஜூலை 21 அன்று உயிரிழந்தார். இதுவே இந்த ஆண்டில் நிபா வைரஸ் பாதிப்பில் கேரளத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு. பின்னர், கடந்த செப் 9 அன்று பலியான நபருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருந்ததாக அரசு உறுதி செய்தது.
இதையடுத்து, மலப்புரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பொதுவிடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.