பயிற்சிபெற்ற, புத்திக் கூர்மையான.. : ரூ.10,000 பரிசுத் தொகையுடன் காணவில்லை போஸ்டர்!

பயிற்சிபெற்ற, புத்திக்கூர்மையான என்று தொடங்கி காணாமல் போன கிளியை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.10,000 பரிசு என்று முடிகிறது போஸ்டர்
பிரதி படம்
பிரதி படம்
Published on
Updated on
1 min read

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரயில் நிலையங்கள், நீதிமன்ற வளாகங்கள் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. இது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த போஸ்டரில் அப்படி என்னத்தான் இருக்கிறது என்று பார்த்தால், முழுக்க முழுக்க ஹிந்தியில் அச்சிடப்பட்டிருக்கும் காணவில்லை போஸ்டரில், கிளியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

ஆண் கிளி, கழுத்தில் சிவப்பு நிற வளையம் இருக்கும். மித்து என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கிளி பல ஆண்டுகளாக தங்களது வீட்டில் ஒருவராக இருந்து வந்தது.

ஃபைசாபாத் நகரில், நீர் விஹார் காலணியில் தங்களது வீடு அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கும் போஸ்டரை அரசுத் தேர்வுகளில் பங்கேற்று வரும் மாணவர் ஷைலேஷ் குமார் என்பவர்தான் அச்சடித்துள்ளார்.

மேலும், இந்தக் கிளி மிகவும் பயிற்சிபெற்ற, புத்திக்கூர்மை நிறைந்தது என்றும், தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களின் பெயரைச் சொல்லிவிட்டால், அவர்கள் பெயர்களை சொல்லி மிகச் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கும் என்றும், நாம் பேசுவதைப் போலவே மிமிக்ரி செய்து அசத்தும் திறன் பெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துரதிருஷ்டவசமாக, ஒருநாள் கிளியின் கூண்டு திறந்துவைக்கப்பட்டிருந்த நிலையில், அது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், 20 நாள்களாக அதனைக் காணவில்லை என்றும், வீடு திரும்பவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதுநாள் முதல் எனது ஒட்டுமொத்த குடும்பமும் வருத்தத்தில் இருப்பதாகவும், அதனை இழக்க யாரும் விரும்பவில்லை என்றும் தெரிவித்து, கிளி பற்றி தகவல் தெரிவித்தால், ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இரண்டு செல்போன் எண்களும் அளிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனால், மனிதர்களையே தேடாத பல உறவுகள் இருக்கும் இந்தக் காலத்தில் கிளியை ரூ.10 ஆயிரம் பரிசு தருவதாகக் கூறி தேடுபவர்களைப் பற்றி மக்கள் ஆச்சரியத்துடன் பேசி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com