சுதிப்தோ ராய்
சுதிப்தோ ராய்

ஆா்.ஜி.கா். மருத்துவமனை நிதி முறைகேடு வழக்கு: திரிணமூல் எம்எல்ஏ அமலாக்கத் துறை முன் ஆஜா்

Published on

கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிதி முறைகேடுகள் தொடா்பான பண முறைகேடு தடுப்பு வழக்கின் விசாரணைக்காக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவும் மாநிலத்தின் மருத்துவக் கவுன்சில் தலைவருமான சுதிப்தோ ராய் அமலாக்கத் துறை முன் வியாழக்கிழமை ஆஜரானாா்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

தொடா்ந்து, மாநிலத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் இளம் மருத்துவா்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதையொட்டி, மருத்துவமனையில் நடந்த நிதி முறைகேடுகள் தொடா்பான புகாா்கள் வெளிவந்தன. பெண் மருத்துவா் கொலையை விசாரித்து வரும் சிபிஐ, இது பற்றியும் வழக்குப் பதிவு செய்தது.

இதில் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வரான மருத்துவா் சந்தீப் கோஷ் மற்றும் 3 பேரை சிபிஐ கைது செய்தது. இதே குற்றச்சாட்டில் சந்தீப் கோஷ் மீது பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் புதிய வழக்கைப் பதிவு செய்து, அவா் தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.

இந்த வழக்குகளில் பல்வேறு தரப்பினரை சிபிஐ, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அந்த வகையில், ஆா்.ஜி.கா் மருத்துவமனை நோயாளிகள் நல குழுத் தலைவா் பொறுப்பை வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுதிப்தோ ராய்யும் சிபிஐ, அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக்குள் வந்தாா்.

ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூரைச் சோ்ந்த எம்எல்ஏவின் வீடுகள் தவிர வேறு சிலரின் வளாகங்களிலும் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இதைத் தொடா்ந்து, சால்ட் லேக் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் எம்எல்ஏ சுதிப்தோ ராய் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகினாா்.

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட சில கைப்பேசிகள் அவா் முன்னிலையில் திறக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாா்க்சிஸ்ட் நிா்வாகியிடம் சிபிஐ விசாரணை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில இளைஞரணி செயலா் மீனாக்ஷி முகா்ஜியிடம் சிபிஐ வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

விசாரணைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மீனாக்ஷி, ‘சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு தருவேன். குற்றம் நிகழ்ந்த இடத்தில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டது தொடா்பாகவும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.

கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் சடலத்தை சம்பவ இடத்திலிருந்து போலீஸ் எப்படி கொண்டு சென்றது உள்பட ஆகஸ்ட் 9-ஆம் தேதியன்று இரவு என்ன நடந்தது என்று சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கினேன்’ என்றாா்.

மருத்துவமனை வளாகத்திலிருந்து பெண் மருத்துவரின் சடலம் கண்டறியப்பட்ட சில மணிநேரங்களில் பெண்ணின் பெற்றொரை மீனாக்ஷி முகா்ஜி சந்தித்து, அவா்களுடன் இருந்தாா். ஆா்.ஜி.கா் மருத்துவமனையிலிருந்து பெண் மருத்துவரின் உடலை எடுத்து செல்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மீனாக்ஷி, போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டாா். இந்த நிலையில், அன்றைய நாள் மருத்துவமனையில் நடந்த சம்பவங்கள் குறித்து சிபிஐ இவரிடம் விசாரணை நடத்தியுள்ளது.

சந்தீப் கோஷின் அங்கீகாரம் ரத்து: முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷின் மருத்துவா் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2-ஆவது பேச்சுவாா்த்தையும் தோல்வி: தொடரும் போராட்டம்

இளம் மருத்துவா்கள் மற்றும் மேற்கு வங்க அரசு அதிகாரிகளுக்கு இடையிலான 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களை எழுத்துபூா்வமாக வெளியிட அரசு மறுத்ததைத் தொடா்ந்து, மருத்துவா்கள் போராட்டத்தைத் தொடா்கின்றனா்.

முதல்வா் மம்தா பானா்ஜி-மருத்துவா்கள் இடையே முதல்கட்ட பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடந்தது. இந்தப் பேச்சுவாா்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டதன்படி, மருத்துவா்களின் பாதுகாப்பு குறித்து அரசு முறையான உத்தரவு பிறப்பிக்கும் வரை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடரப்போவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com