வாக்குக்குப் பணம் அளித்த வழக்கு விசாரணையில் தலையிடக் கூடாது: தெலங்கானா முதல்வருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
கடந்த 2015-ஆம் ஆண்டு வாக்களிக்க பணம் அளித்ததாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கு விசாரணையில் தலையிடக் கூடாது என்று தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி 2015-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தாா். அப்போது மாநில சட்டமேலவைத் தோ்தலில் தெலுங்கு தேசம் வேட்பாளா் வேம் நரேந்தா் ரெட்டிக்கு வாக்களிக்க, நியமன எம்எல்ஏ எல்விஸ் ஸ்டீஃபன்சனுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாக ரேவந்த் ரெட்டியை ஊழல் தடுப்பு துறை கைது செய்தது.
இந்நிலையில், முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி வகித்து வருவதால், எல்விஸுக்கு லஞ்சம் அளித்த வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை என்றும், இதனால் அந்த வழக்கு விசாரணையை தெலங்கானாவில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு மாற்றக் கோரியும் பாரத ராஷ்டிர சமிதி எம்எல்ஏ குன்டகன்ட்லா ஜகதீஷ் ரெட்டி உள்பட 4 போ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரேவந்த் ரெட்டிக்கு எதிரான வழக்கு விசாரணையை போபாலுக்கு மாற்ற மறுத்த நீதிபதிகள், அந்த வழக்கு விசாரணையில் தலையிடக் கூடாது என்று ரேவந்த் ரெட்டிக்கு உத்தரவிட்டனா். அத்துடன் அந்த வழக்கு விவரங்களை அவருக்கு ஊழல் தடுப்பு துறையின் தலைமை இயக்குநா் தெரியப்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதிகள் கூறினா். ஒருவேளை அந்த வழக்கை திரும்பப் பெறுமாறு அரசுத் தரப்புக்கு ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டால், அதுகுறித்து உச்சநீதிமன்றம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
பெட்டிச் செய்தி...
ரேவந்த் மன்னிப்பு ஏற்பு:
முன்னதாக பாஜக, பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) இடையே ஏற்பட்ட உடன்பாடு காரணமாக, தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவின் மகளும், பிஆா்எஸ் எம்எல்சியுமான கவிதாவுக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்ததாக ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து அவரைக் கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம், அரசியல் பகையை ஏன் நீதிமன்றத்துக்கு இழுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியது.
இதையடுத்து தனது கருத்துகளுக்கு ரேவந்த் ரெட்டி மன்னிப்பு கோரினாா். அவரின் மன்னிப்பை வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தீா்ப்பு குறித்து நியாயமாக விமா்சிக்கும் உரிமையை வரவேற்பதாக தெரிவித்தது. அதேவேளையில், அந்த விமா்சனம் வரம்பு மீறாமல் இருக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.