அமெரிக்காவில் விபத்தில் காயமடைந்த இளைஞரின் வீட்டிற்கு இன்று திடீரென சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கொண்டார்.
அங்கு பணிபுரிந்து வரும் ஹரியாணாவைச் சேர்ந்த இளைஞர் அமித் குமார் என்பவரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். சமீபத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்த அமித் குமாரை நலம் விசாரித்தார். அப்போது ஹரியாணாவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அவரது தாயை சந்திப்பதாக உறுதியளித்துள்ளார்.
அதன்படி, இன்று காலை 6 மணியளவில் ஹரியாணா மாநிலம் கர்னல் மாவட்டம் கோக்ரிபூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திடீரென சென்றார். அமித் குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசி அவரது நிலைமை குறித்து எடுத்துரைத்தார்.
அமித் குமாரின் தாய் பிர்மதி இதுகுறித்து கூறுகையில், 'அமெரிக்காவில் அமித்தை சந்தித்ததாகவும், அவரது குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதாக உறுதியளித்ததாகவும் ராகுல் காந்தி கூறினார். காலை 6 மணிக்கு ராகுல் காந்தி இங்கு வந்தார், அவர் வரப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது. எங்களுடைய குடும்ப சூழ்நிலையை கேட்டுவிட்டு உதவி செய்வதாகக் கூறினார். அங்கு விபத்தில் சிக்கிய அமித்தின் உடல்நிலை சரியில்லை என்று ராகுல் கூறினார்' என்றார்.
ஹரியாணாவில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.