
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி எழுதிய கடிதத்தில், “சந்திரபாபு நாயுடுவின் பொறுப்பற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளால் பக்தர்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்திற்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பகவான் வெங்கடேஷ்வரருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் கோடிகணக்கான பக்தர்கள் இருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையை சரியான முறையில் கையாளாமல் போனால், இந்தப் பொய்கள் பக்தர்கள் மனதில் பரவலாக வேதனையைத் தூண்டி, பல்வேறு நிலைகளில் பிரச்னைகளைத் தூண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், “திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்பது சுயாதீன வாரியம். அதில், பலதரப்பட்ட சூழல்களில் இருந்து வரும் உண்மையான பக்தர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள் பரிந்துரைக்கும் நபர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தற்போதுள்ள உறுப்பினர்களில் சிலர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் நிர்வாகத்தை மேற்பார்வை செய்யும் அதிகாரம் அறங்காவலர் குழுவிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாகத்தில் ஆந்திர பிரதேச மாநில அரசிற்கு மிகச் சிறிய பங்கு மட்டுமே உள்ளது” என்று ஜெகன் குறிப்பிட்டுள்ளார்.
கோவிலுக்குள் கொண்டு வரப்படும் நெய்யின் தரம் குறித்து பல சோதனைகள் நடத்தப்படுகிறது. இங்கு பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு டெண்டர் விடுவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற ஆய்வகச் சோதனைகள் மற்றும் பலதரப்பட்ட சோதனைகளும் நடத்தப்பட்ட பின்னரே பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிட்ட ஜெகன் மோகன் ரெட்டி, இதேபோன்ற நடைமுறைகள் முந்தைய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியிலும் பின்பற்றதாகக் கூறினார்.
”இத்தகைய கடுமையான சோதனைகளுக்குப் பின்னரும் பிரசாதம் செய்வதற்கு கலப்பட நெய் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை” என்று ஜெகன் தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு குறித்து கடுமையாக விமர்சித்த ஜெகன் மோகன் ரெட்டி தனது கடிதத்தில், ”சந்திரபாபு நாயுடு ஒரு தொடர்ச்சியான பொய்யர். அரசியல் நோக்கங்களுக்காக கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை தீவிரமாக புண்படுத்தியுள்ளார். அவரது செயல்கள் ஒரு முதல்வரின் மரியாதை மட்டுமின்றி, பொதுவாழ்க்கையில் உள்ள அனைவரின் மரியாதையையும், உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தையும் குறைத்துவிட்டன.
இந்த முக்கியமான தருணத்தில் நாடு முழுவதும் உங்களை நம்பியுள்ளது. இழிவான பொய்களைப் பரப்பிய சந்திரபாபு நாயுடு கடுமையான முறையில் கண்டிக்கப்பட வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். அதுவே, கோடிக்கணக்கான இந்துக்களின் மனதில் சந்திரபாபு நாயுடு உருவாக்கிய சந்தேகங்களை நீக்கி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதம் குறித்த அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்” என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.