புதிய நெய் விற்பனையாளருடன் இணைந்து ஒவ்வொரு நாளும் 8 முதல் 9 லட்சம் லட்டுகளை வழங்கத் தயார் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
புதிய நெய் விற்பனையாளரான கர்நாடக பால் கூட்டமைப்புடன் இணைந்து, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் லட்டுகளின் உண்மைத் தரத்தை உடனடியாக மீட்டெடுப்பதாக உறுதியளித்துள்ளது.
லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு காணப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மாநிலம் முழுவதுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
நிர்வாக அதிகாரி பேச்சு
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜே. சியாமளா ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “லட்டுகளின் தரம் மற்றும் பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் ஆகியவற்றில் இனி எந்த சமரசமும் இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதம் மற்றும் அனைத்து உபயோகத்திற்குமான நெய் விநியோகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சனிக்கிழமை நிறுத்தியது.
கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நந்தினி நெய் பிரசாதத்தில் பயன்படுத்தவும் வெள்ளிக்கிழமை உத்தவிடப்பட்டது.
பிரம்மோற்சவம்
கோயிலில் ஒன்பது நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்திற்கு முன்னதாக திருப்பதி தேவஸ்தானம் நெய்யை சேமித்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு பிரம்மோற்சவம் அக்டோபர் 4 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசாதம் தயாரிக்கும் சமையல் அறையின் பொறுப்பாளர் முனி ரத்னம் கூறுகையில், “பிரமோற்சவத்தின் போது, கோயிலில் தினமும் 8 முதல் 9 லட்சம் லட்டுகள் வரை வழங்கத் தயார் செய்யப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ விழாவில் 7 முதல் 8 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கிறது. 24 மணி நேரமும் லட்டு தயாரிக்க தேவையான நெய் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
ஸ்ரீவாரி பிரசாதம் எனப்படும் மற்ற பிரசாதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பசு நெய் சார்ந்த பொருள்களின் பயன்பாட்டை சனிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தியது.
கருட சேவை
இதற்கிடையில், வருகிற பிரம்மோற்சவத்தின் போது, குறிப்பாக கருட சேவை நாளான அக்டோபர் 8 ஆம் தேதி அதிக பக்தர்கள் வருவதால் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
அக்டோபர் 7 முதல் 9 வரை கோவிலுக்குச் செல்வதற்கும், வெளியே வருவதற்கும் காட் ரோடுகளில் இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்றும், போக்குவரத்து சிக்கலைத் தவிர்க்க திருப்பதியில் உள்ள ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் செல்லுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.