பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

மக்களவைத் தேர்தல் முடிவுகளால் பிரதமர் மோடி தனது நம்பிக்கையை இழந்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
rahul gandhi
ஜம்மு- காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி. dinamani
Published on
Updated on
1 min read

மக்களவைத் தேர்தல் முடிவுகளால் பிரதமர் மோடி தனது நம்பிக்கையை இழந்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'பாஜகவும் ஆர்எஸ்எஸும் சேர்ந்து நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறையைப் பரப்புகிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் மதம், சாதி, மாநிலங்கள் மற்றும் மொழிகள் இடையே பிரிவினையை உருவாக்குகிறார்கள். மக்களிடையே மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

ஜம்மு- காஷ்மீரில் பஹாரி- குஜ்ஜார் சமூகத்தினரிடையே மோதலைத் தூண்ட முயற்சித்தனர். ஆனால், அவர்களது முயற்சி தோல்வியடைந்தது.

வெறுப்பை அன்பால் மட்டுமே சரிசெய்ய முடியும். ஒருபக்கம் ஒரு தரப்பினர் வெறுப்பைப் பரப்புகின்றனர். மற்றொரு பக்கம் வேறு ஒரு தரப்பினர் அன்பைப் பரப்புகின்றனர்.

நாட்டில் ஒவ்வொருவரையும் ஒன்றிணைக்கவும் அவர்களுக்கான உரிமைகளை வழங்கவும் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. நாட்டில் அனைவரும் சமம். யாரையும் விட்டுவிடமாட்டோம்.

மக்களுக்கு என்ன தேவையோ, மக்கள் என்ன வேலையை எதிர்பார்க்கிறார்களோ, நான் நாடாளுமன்றத்தில் அதனைப் பேசத் தயாராக இருக்கிறேன். ஜம்மு-காஷ்மீர் மக்கள் எனக்கு அறிவுறுத்தினால் மட்டுமே போதுமானது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. மக்களுக்கு எதிரான அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது நம்பிக்கையை இழந்துவிட்டார். அது அவரது முகத்தில் நன்றாகத் தெரிகிறது. நாம் அவரை உளவியல் ரீதியாக உடைத்துவிட்டோம். அவர் முன்பு இருந்தது போல இல்லை' என்று பேசியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்

ஜம்மு - காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 90 பேரவைத் தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு செப். 18 ஆம் தேதி நடைபெற்றது.

செப். 25, அக். 1 ஆகிய தேதிகளில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் களமிறங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.