'பாஜகவின் அறிவுரை வேண்டாம்' - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குமாரி செல்ஜா!

பாஜகவின் அறிவுரை தேவையில்லை, தனது பயணத்தை காங்கிரஸ் தீர்மானிக்கும் என ஹரியாணா காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி செல்ஜா கூறியுள்ளார்.
Kumari Selja
குமாரி செல்ஜா
Published on
Updated on
2 min read

பாஜகவின் அறிவுரை தேவையில்லை, தனது பயணத்தை காங்கிரஸ் தீர்மானிக்கும் என ஹரியாணா காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி செல்ஜா கூறியுள்ளார்.

ஹரியாணாவில் வருகிற அக். 5 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு உள்கட்சி குழப்பம் நீடித்து வருகிறது.

ஹரியாணாவின் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடாவுக்கும், மாநில முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய எம்.பி.யுமான குமாரி செல்ஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தேர்தல் நெருங்கியும் குழப்பம் நீடித்து வருகிறது.

தற்போது ஹரியாணா தேர்தல் பிரசாரத்தில் இருந்து குமாரி செல்ஜா விலகியிருப்பது அங்கு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியாணா பேரவைத் தேர்தலில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு குறைந்த இடமே ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே உள்ள பிரச்னையைத் தீர்க்க கட்சியின் மூத்த தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தும் விதத்தில் பாஜக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், 'குமாரி செல்ஜா பாஜகவில் சேருவார், சுயமரியாதை உள்ள எந்தவொரு நபரும் இந்த சூழ்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பரிசீலிப்பார்' என்று கூறி பாஜகவில் சேர குமாரி செல்ஜாவுக்கு அழைப்பு விடுத்தார். இதனால் அங்கு அரசியல் களத்தில் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குமாரி செல்ஜா இன்றைய நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'பாஜக தலைவர்கள் எனக்கு அறிவுரை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். எனது தந்தை மூவர்ணக்கொடி போர்த்தி இறந்ததுபோல் காங்கிரஸ் என் நரம்புகளில் ஓடுகிறது. நானும் ஒரு நாள் அதே மூவர்ணக்கொடியை போர்த்திக்கொண்டு செல்வேன்.

கட்சிக்குள் எந்த அதிருப்தியும் இல்லை. கட்சியை மேம்படுத்தும்பொருட்டு சில உள் விவகாரங்கள் தீர்க்கப்பட்டு வருகிறது.

கட்சிக்குள் எப்பொழுதும் சில விவாதங்கள் இருக்கும். அதை வெளியில் சொல்ல முடியாது. கட்சி முன்னேறும் வகையில் சில முடிவுகளை எடுப்பதில் இதுவும் ஒரு பகுதியாகும்' என்றார்.

மேலும், 'வேட்புமனுக்கள் குறித்து கட்சிதான் முடிவெடுக்க வேண்டும், யார் வேண்டுமானாலும் உரிமை கோரலாம். சிலருக்கு பயத்தை உண்டாக்கும் விஷயங்களை நான் கூறியிருக்கலாம், ஆனால் அது அரசியலின் ஒரு பகுதி.

சட்டப்பேரவைத் தேர்தலில் உக்லானா தொகுதியில் போட்டியிட விரும்பினேன், ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அரசியலில் என்னுடைய வாய்ப்பு முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. எதிர்காலத்தில் இன்னும் அதிக வாய்ப்புகள் இருக்கும்' என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றால் முதல்வர் யார் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், 'அதுகுறித்த தெளிவு இன்னும் இல்லை. கட்சியின் உயர்மட்டக்குழு இதுகுறித்து முடிவு செய்யும், ஆனால், நேரம் அனைத்தையும் முடிவுசெய்யும்' என்றார்.

மேலும், குமாரி செல்ஜா வருகிற செப். 26 ஆம் தேதி நர்வானா பகுதியில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுரேஜ்வாலா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் ஹரியாணாவில் நிலவும் குழப்பம் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.