மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு சில அரசு மருத்துவமனைகளில், முகப்பவுடரும், வெறும் ஸ்டார்ச்சும் கலந்து, ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் என்று விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம், இதுபோன்ற போலியான மருந்துகளை விநியோகிக்கும் கும்பல் கண்டுபிடிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நாக்பூர் நீதிமன்றத்தில், இது தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் இதுபோன்ற முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2023ஆம் ஆண்டு, மருந்து ஆய்வாளர் நிதின் பந்தர்கர், அரசு மருத்துவமனை ஒன்றில் வழங்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து உண்மையில் மருந்தேயில்லை என்றும், அது முகப்பவுடர்தான் என்றும் கண்டறிந்தபோதுதான் இந்த மோசடியே வெளிச்சத்துக்கு வந்தது.
ஹரித்வாரில் உள்ள கால்நடை மருத்துவ ஆய்வகத்தில் இந்த போலி நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து எனப்படும் ஆன்டிபயாடிக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பணப் பரிமாற்றத்துக்கு ஹவாலா சேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாக்பூர் ஊரக காவல்துறையினருடன் உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தக் குற்றப்பத்திரிகையில், 12க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்ததும், இந்தக் கும்பல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற போலி மருந்துகளை தயாரித்து அரசு மருத்துவமனைகளில் வழிங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கோவிட் -19 தொற்றுநோய் காலமும் அடங்கும் என்பதும், சிப்ரோஃப்ளோக்சசின், லிவோஃப்ளோக்சசின், அமோக்ஸிசிலின் உள்ளிட்ட பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் போலிகளையும் இவர்கள் தயாரித்து விநியோகித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
போலி மருந்துகளை தயாரித்ததன் மூலம், இந்த கும்பல் ரூ.15 முதல் 16 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளது. நாக்பூர், தாணே, வர்தா, லடூர், நான்டெட் போன்ற நகரங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததும். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இந்த நகரங்களில் பதிவானதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் ஜார்கண்ட், ஹரியாணா மாநிலங்களிலும் போலி மருந்துகளை விற்பனை செய்திருப்பதாகவும், விசாரணையில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரியவரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது மிகப்பெரிய மோசடி சங்கிலியாக இருப்பதாகவும், பல்வேறு நகரங்கள் வழியாக, இந்த பணம் ஹவாலா மோசடி மூலம் கைமாறுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தை எடுக்கும் ஹேமந்த் முலே இதில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.