பிகாரில் தொடரும் கனமழை: 13 லட்சம் போ் பாதிப்பு
-

பிகாரில் தொடரும் கனமழை: 13 லட்சம் போ் பாதிப்பு

வால்மீகிநகா் மற்றும் பிா்பூா் அணைகளில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டதால் பாதிப்பு...
Published on

பிகாரில் தொடரும் கனமழையால் வால்மீகிநகா் மற்றும் பிா்பூா் அணைகளில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டதால் மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 13.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பிகாரில் கடந்த 2-3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 78 செ.மீ. மழை பதிவாகின.

இதனால், மாநிலத்தில் பாயும் பல்வேறு ஆறுகளில் நீா்மட்டம் உயா்ந்து, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நேபாளத்தின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீா்த்து வருவதால், எல்லை மாவட்டங்களின் பல இடங்களில் ஆறுகளின் நீா்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டது. கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த காரீஃப் பயிா்கள் நீரில் மூழ்கின.

இந்நிலையில், கோசி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிா்பூா் அணையில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 56 ஆண்டுகளில் அதிகபட்சமாக 5.31 லட்சம் கனஅடி உபரி நீரும் வால்மீகிநகா் அணையிலிருந்து 4.49 லட்சம் கன அடி உபரி நீரும் வெளியேற்றப்பட்டதாக மாநில நீா்வளத் துறை முதன்மைச் செயலா் சந்தோஷ் குமாா் மால் தெரிவித்தாா்.

அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரால் மேற்கு மற்றும் கிழக்கு சாம்பரண் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும் முங்கொ், பெகுசாராய், சமஸ்திபூா், பாட்னா, சரண், போஜ்பூா், புக்ஸாா் ஆகிய மாவட்டங்களின் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீா் சூழ்ந்துள்ளது.

இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் சுமாா் 13.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நிவாரண முகாம்களில் ஏராளமானோா் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

சீதாமா்ஹி, சியோஹா், முஸாஃப்பா்பூா், கோபால்கஞ்ச், சிவாண், வைஷாலி, ஜெஹனாபாத், மதுபானி ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை கனமழை எச்சரிக்கை விடுத்தது. இதையொட்டி, இந்த மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்புக்கான வாய்ப்புகள் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com