ரயில்வே அமைச்சர் வெளியிட்ட வந்தேபாரத் விடியோவில் பெரு நாட்டின் ரயில்! வைரலானதும் பதிவை நீக்கினார்! ஆனால்..

ரயில்வே அமைச்சர் வெளியிட்ட வந்தேபாரத் விடியோவில் பெரு நாட்டின் ரயிலின் விடியோ இணைப்பு. வைரலானதும் பதிவை நீக்கினார்!
ரயில்வே அமைச்சர் வெளியிட்ட வந்தேபாரத் விடியோவில் பெரு நாட்டின் ரயில்! வைரலானதும் பதிவை நீக்கினார்! ஆனால்..
Published on
Updated on
2 min read

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களின் பெருமையை பதிவிடுவதாக எண்ணி பெரு நாட்டு ரயிலின் விடியோவை இணைத்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

உலகம் முழுவதும் உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ஒரு ரயில் விடியோவை இணைத்து, வந்தே பாரத், அமிருத் பாரத் மற்றும் நமோ பாரத் ரயில்களின் சங்கமம் என்று ஆங்கிலம், ஹிந்தி கலந்து பதிவிட்டிருந்தார்.

இதுவல்ல பிரச்னை, இதனுடன் அவர் இணைத்திருந்த விடியோவில்தான் சிக்கல், அதாவது, நமோ பாரத் ரேபிட் ரயில் என்று அவர் ஆரஞ்சு வர்ணத்தில் லேபிள் ஒட்டி வெளியிட்டிருந்த விடியோவில் ஓடிக்கொண்டிருந்தது என்னவோ பெரு நாட்டு ரயில். விடியோ தொடங்கும்போது நன்றாகத்தான் உள்ளது. ஓடுவது ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில்தான். ஆனால், ஒரு சில வினாடிகளில் ரயிலுக்குள்ளிருந்து சில காட்சிகள் வருகின்றன. அங்கேதான் சங்கதி ஆரம்பிக்கிறது. பெரு ரயிலின் உள்ளிருக்கும் கட்டமைப்புகள், ரயிலுக்குள் இருந்து பெரு நாட்டின் வெளிப்புற காட்சிகள், பெரு நாட்டுப் பயணி காட்சிகளை தனது காமராவில் ஒளிப்பதிவு செய்வது என அனைத்தும் நிக்கமர நிறைந்திருக்கிறது அந்த விடியோவில்.

இதை அவர் கவனிக்காமல் பதிவிட்டுவிட்டார். ஆனால் சமூக வலைதள மக்கள் பார்க்காமல் இருந்துவிடுவார்களா? பார்த்த பிறகுதான் சும்மா இருந்துவிடுவார்களா? அதுவும் வேறு யாராவது பாமரரோ, ரயில்வேக்கு தொடர்பில்லாதவர்களோ பதிவிட்டிருந்தால்கூட தெரியாமல் போட்டுவிட்டார் என்று விட்டுவிட்டிருப்பார்கள். ஒரு மத்திய அமைச்சர், அதுவும் ரயில்வே அமைச்சராக இருப்பவரே, அவரது ரயில்வே துறையின் விடியோக்கள் அல்லது புகைப்படங்களை சரியாக பார்க்காமல், வெளிநாட்டு ரயிலின் விடியோவை இணைத்து உலக சுற்றுலா தினத்துக்கு வாழ்த்துச் சொன்னால் சும்மா விடுவார்களா?

கருத்துகளும், விமர்சனங்களும் எக்ஸ் பக்கத்தில் குவிந்துவிட்டது. பிறகுதான், அமைச்சரின் காதுக்கு விஷயம் சென்றிருக்கிறது. உடனடியாக தனது தவறை உணர்ந்து, பதிவையும் நீக்கிவிட்டார். (ஆனால் முழு விடியோவும் காணக்கிடைக்கிறது.. கவலை வேண்டாம்) மத்திய அமைச்சர் தனது பதிவை நீக்கிவிடுவார் என்று முன்பே அறிந்து, பலரும் அதனை ஸ்க்ரீன் ஷாட்கள் எடுத்து, தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். பிறகென்ன இந்தப் பதிவுகள் வைரலாகி வருகின்றன.

இதற்கு மக்கள் பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இவர் ரயில்வே அமைச்சர் அல்ல, ரீல் அமைச்சர் என்றும், வந்தே பெரு என்று அமைச்சர் சொல்ல வருகிறாரா என்றும், வந்தே பாரத் ரயில், விடுமுறை எடுத்து பெரு சென்றிருப்பது போல தெரிகிறது எனவும் நக்கலடித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா வெளியிட்டிருக்கும் பதிவில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெரு ரயிலின் விடியோக்களை வைத்து வந்தே பாரத் ரயிலுக்கு விளம்பரம் செய்து வருகிறார் என பதிவுகளுடன் விமர்சித்துள்ளார்.

இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ், தனது எக்ஸ் பக்கத்தில், அந்த பதிவை விடியோவுடன் பகிர்ந்து, இவர் இந்திய ரயில்வே அமைச்சரா அல்லது பெரு ரயில்வே அமைச்சராக என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.