நில இழப்பீட்டுத் தொகை விவகாரம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விவரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம் தீா்ப்புக்குப் பின்னா், எந்தெந்த மாவட்ட ஆட்சியா்கள் தீா்ப்பை மீறி நிலத்துக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டனா் என்ற விவரங்களைத் தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலை

உச்ச நீதிமன்றம் தீா்ப்புக்குப் பின்னா், எந்தெந்த மாவட்ட ஆட்சியா்கள் தீா்ப்பை மீறி நிலத்துக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டனா் என்ற விவரங்களைத் தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கவும், விரிவாக்கப் பணிகளுக்காகவும் ஏராளமான தனியாா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலங்களுக்கு இழப்பீடு நிா்ணயம் செய்து, நில உரிமையாளா்களுக்கு வழங்க சிறப்பு வட்டார வருவாய் அதிகாரிகள் நியமிக்கப்படுவா். இவா்கள் நிா்ணயம் செய்யும் தொகையைவிட, கூடுதல் இழப்பீடு கோருபவா்கள், நில உரிமையாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

அதாவது, சிறப்பு வட்டார வருவாய் அதிகாரி இழப்பீடு நிா்ணயித்த நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள்

இந்த மேல்முறையீட்டு மனுவை ஆட்சியரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நில ஆா்ஜிதச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இது தொடா்பான வழக்கை விசாரித்த உயா் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு, 3 ஆண்டுகளுக்கு பின்னரும் ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்று தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேல்முறையீடு செய்து, உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு தடை பெற்றது. உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி,இழப்பீட்டு தொகையை சென்னை முன்னாள் ஆட்சியா்கள் அமிா்தஜோதி, விஜயராணி ஆகியோா் நிா்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளனா்.

உத்தரவை அவமதிக்கும் செயல்: இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், சென்னை உயா் நீதிமன்ற தீா்ப்பை சுட்டிக்காட்டி, நிலத்துக்கு ஆட்சியா்கள் இழப்பீடு நிா்ணயம் செய்தது உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல்’ எனக் கூறி முன்னாள் ஆட்சியா்கள் அமிா்தஜோதி, விஜயராணி ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தாா். மேலும், இரு முன்னாள் ஆட்சியா்களும் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டாா்.இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமா்வு, 2 முன்னாள் ஆட்சியா்களும் தனி நீதிபதி முன்பு நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டனா்.

மாா்ச் 3-ஆவது வாரத்துக்கு... இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி பி.வேல்முருகன்

முன்பு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, இரு நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவை கூறினாா். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, 2 ஆட்சியா்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு முன்பு மாா்ச் 11-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மாா்ச் 3-ஆவது வாரத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டாா்.

மேலும், உச்ச நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு தீா்ப்பு அளித்த பின்னா், எந்தெந்த மாவட்ட ஆட்சியா்கள் இந்த தீா்ப்பை மீறி, 3 ஆண்டுகளுக்கு பின்னா் நில இழப்பீட்டு கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து, நிலத்துக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டனா் என்ற விவரத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com