
ஆந்திரத்தில் சமைக்காத இறைச்சியை உண்ட 2 வயது சிறுமி பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுப் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரத்தில் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ் பேட்டையைச் சேர்ந்த 2 வயது சிறுமிக்கு கடந்த பிப்ரவரி 28 அன்று அவரது பெற்றோர் சமைக்காத பச்சை சிக்கன் துண்டு சிலவற்றை ஊட்டியுள்ளனர். சிக்கன் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே சிறுமி மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிறுமியின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் மங்களகிரியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 7ல் சிறுமியின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
சிகிச்சை பலனின்றி மார்ச் 16-ல் சிறுமி உயிரிழந்தார். புணேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் குண்டூரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் சிறுமிக்குப் பறவை காய்ச்சல் இருந்ததை உறுதி செய்தது.
இதையடுத்து, அனைத்து மாவட்ட மருத்துவ சுகாதார அதிகாரிகளும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது. சிறுமி இறந்த அதே குடும்பத்தில் சமைத்த இறைச்சியை உண்டவர்களின் ரத்த மாதிரி சோதனை செய்ததில், அவர்கள் யாருக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.
சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து, குண்டூர், பல்நாடு, பிரகாசம் மற்றும் நரசராவ்பேட்டை நகரில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளிலும் கண்காணித்து வருவதாகக் கால்நடை பராமரிப்பு இயக்குநர் நாயுடு கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.