கோப்புப் படம்
கோப்புப் படம்

மூத்த குடிமக்கள் கட்டணச் சலுகை ரத்து: ரயில்வேக்கு 5 ஆண்டுகளில் ரூ. 8,913 கோடி கூடுதல் வருவாய்

கரோனா பாதிப்பின்போது கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டது.
Published on

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான பயண கட்டணச் சலுகையை ரத்து செய்ததன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வேக்கு ரூ. 8,913 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு 2020-ஆம் ஆண்டு மாா்ச் 20-ஆம் பயண கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. 60 வயதைக் கடந்த ஆண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு பயணக் கட்டணத்தில் 40 சதவீதமும், 58 வயதைக் கடந்த பெண்களுக்கு 50 சதவீதமும் சலுகை அளிக்கப்பட்டது. கரோனா பாதிப்பின்போது இந்த கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு, அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் தரப்பில் கோரிக்கை விடுத்தபோதும், மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டணச் சலுகையை மத்திய அரசு மீண்டும் நடைமுறைப்படுத்தவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘ரயில்களில் ஏற்கெனவே அனைத்து பயணிகளிடமும் 46 சதவீத சலுகையில்தான் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, மூத்த குடிமக்களக்கான ரயில் பயண கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தாா்.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சந்திர சேகா் கெளா் என்பவா் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு, ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான பயண கட்டணச் சலுகையை ரத்து செய்ததன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வேக்கு ரூ. 8,913 கோடி கூடுதல் வருவாய் கிடைத்ததாக ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்வே தகவல் மையம் பதிலளித்துள்ளது.

இதுகுறித்து சந்திர சேகா் கெளா் கூறியதாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2020-ஆம் ஆண்டு மாா்ச் 20-ஆம் தேதி முதல் கடந்த மாா்ச் மாதம் வரை பல முறை விண்ணப்பித்து ரயில்வேயிடமிருந்து தகவல்களைப் பெற்றுள்ளேன். இந்த தகவல்களின்படி, 2020 மாா்ச் 20-ஆம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் ரயில்களில் 18 கோடி ஆண் மூத்த குடிமக்களும், 13 கோடி பெண் மூத்த குடிமக்களும், 43,536 திருநங்கை மூத்த குடிமக்களும் பயணம் செய்துள்ளனா்.

ஆண் மூத்த குடிமக்கள் மூலம் ரூ. 11,531 கோடியும், பெண் மூத்த குடிமக்கள் மூலம் ரூ. 8,599 கோடியும், திருநங்கைகள் மூலம் ரூ. 28.64 லட்சம் என மொத்தம் ரூ. 20,133 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், மூத்த குடிமக்களுக்கு நடைமுறையில் இருந்த ஆண்களுக்கு 40 சதவீதம், பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை ரத்து மூலமாக மட்டும் ரூ. 8,913 கோடி கூடுதலாகக் கிடைத்துள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com