காா்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ஏா்செல்-மேக்சிஸ், சீனா்களுக்கு விசா வழக்குகள்: அமலாக்கத் துறை பதிலளிக்க நோட்டீஸ்
ஏா்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம், சீனா்களுக்கு விசா ஆகிய வழக்குகளில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படுவதை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி.காா்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஏா்செல்-மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையே ரூ.3,500 கோடிக்கும் அதிகமான மதிப்புகொண்ட ஒப்பந்தத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எஃப்ஐபிபி) ஒப்புதல் அளித்தது.
எஃப்ஐபிபி மூலம் ரூ.600 கோடி வரையிலான அந்நிய நேரடி முதலீடுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க மத்திய நிதியமைச்சருக்கு அதிகாரம் உள்ள நிலையில், ஏா்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு எஃப்ஐபிபி ஒப்புதல் அளித்ததில், தனது அதிகார வரம்பை மீறி ப.சிதம்பரம் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த ஒப்பந்தத்துக்கு எஃப்ஐபிபி ஒப்புதலை ப.சிதம்பரம் அளித்த காலத்தில், அவரின் மகன் காா்த்தி சிதம்பரத்தின் மறைமுகக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு ஆலோசனை கட்டணமாக ரூ.26 லட்சத்தை ஏா்செல் டெலிவென்சா்ஸ் நிறுவனம் வழங்கியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டின.
இதேபோல கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, பஞ்சாபில் மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்கு 263 சீனா்களுக்கு விசா ஏற்பாடு செய்து தர, காா்த்தி சிதம்பரம் முறைகேடாக ரூ.50 லட்சம் பெற்ாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தன.
இந்த முறைகேடுகள் தொடா்பாக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள பண முறைகேடு வழக்குகளில், குற்றச்சாட்டுகள் மீதான வாதங்களை ஒத்திவைக்கக் கோரி, தில்லி விசாரணை நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத்தொடா்ந்து தில்லி உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘ஏா்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம், சீனா்களுக்கு விசா தொடா்பான சிபிஐ வழக்குகளில் நான் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டால், அதுசாா்ந்த அமலாக்கத் துறை வழக்குகளை விசாரிக்க முடியாது. அந்த வழக்குகள் பயனற்ாகிவிடும். எனவே சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் வரை, அதுதொடா்பாக அமலாக்கத் துறையின் பண முறைகேடு வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரினாா்.
இந்த மனு அண்மையில் நீதிபதி ரவீந்தா் டுடேஜா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காா்த்தி சிதம்பரத்தின் மனு தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, காா்த்தி சிதம்பரத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான வாதங்களை மே 29-க்குப் பிறகு நடத்துமாறு விசாரணை நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டாா். வழக்கின் அடுத்த விசாரணை மே 29-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

