நாட்டிலேயே முதல்முறை... இணையத்தில் லோக் அதாலத் சேவைகள்!

இணையத்தில் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) சேவைகளை வழங்கும் முதல் மாநிலமாக கேரளம் மாறியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இணையத்தில் (மக்கள் நீதிமன்றம்) லோக் அதாலத் சேவைகளை வழங்கும் முதல் மாநிலமாக கேரளம் மாறியுள்ளது.

இதன்மூலம் இணையத்தில் மனுத்தாக்கல் செய்யவும், இணைய வாயிலாகவே ஆஜராகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் குறிப்பாக விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எளிமையாக நீதித் துறையை அணுக வேண்டும் என்ற நோக்கத்தில் இணையத்தில் லோக் அதாலத் சேவைகளை கேரளம் அறிமுகம் செய்துள்ளது.

பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்கப்படக் கூடிய சிறிய குற்றங்கள், வருவாய், வங்கிக் கடன் மீட்பு, சாலை விபத்து, காசோலை மோசடி, தொழிலாளா் பிரச்னைகள், விவாகரத்து தவிர பிற திருமண பிரச்னைகள், பிற சிவில் வழக்குகள் உள்ளிட்டவை லோக் அதாலத்தில் விசாரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு காலாண்டுக்கும் லோக் அதாலத் அமர்வு மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடித் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதனிடையே லோக் அதாலத்தை மக்கள் எளிமையாக அணுகும் வகையில் கேரள மாநில சட்ட சேவைகள் ஆணையம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதாவது, இணையம் மூலம் மனுத் தாக்கல் செய்து விசாரணைக்கு இணையம் முலமாகவே ஆஜராகும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

லோக் அதாலத்தில் இணையம் வாயிலாக தாக்கல் செய்யும் வசதியை கேரள உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி நிதின் எம். ஜம்தார் ஏப். 11ஆம் தேதி தொடக்கிவைத்தார்.

மக்கள் அனைவரும் நீதித் துறையை எளிதில் அணுகவும், உரிய நீதியை தாமதமின்றிப் பெறவும் வேண்டும் என்ற கேரள நீதித் துறையின் பரந்த நோக்கத்தின் அடிப்படையில் தொழில்நுட்ப அம்சங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கேரளத்தில் தற்போது திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் இணைய வாயிலான லோக் அதாலத் அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு வரை, எவ்வளவு சிறிய வழக்காக இருந்தாலும், அமர்வு நடைபெறும் இடங்களுக்குச் சென்று மனுத்தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் வழக்குரைஞரால் விசாரணை மேற்கொள்ளப்படும். மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ளவர்களால் இதில் பயன்பெற முடியாத நிலையே நீடித்துவந்தது.

ஆனால், தற்போது இணைய வாயிலாகவும் லோக் அதாலத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பு இந்தத் தடைகளை உடைத்தெரியும். இச்சேவை மே மாத முதல் வாரத்திலிருந்து முழு வீச்சில் அமலுக்கு வரும்.

இந்த முறையில் அனைவரும் நீதித் துறையை அணுக, மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்துகளில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமும் மனுத்தாக்கல் செய்து விசாரணைக்கு ஆஜராகும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | பெங்களூரு விமான நிலைய அறிவிப்புப் பலகையில் ஹிந்தி அகற்றமா? உண்மை என்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com