விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

5 பயங்கரவாதிகள், 3 இடங்கள், 10 நிமிட துப்பாக்கிச் சூடு! பஹல்காமில் நடந்தது என்ன?

பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் எப்படி நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :24 ஏப்ரல் 2025, 1:57 pm IST

பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் எப்படி நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதி 'மினி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் பிரபலமான சுற்றுலா நகரம். இங்குள்ள பைசாரன் பள்ளத்தாக்கு, பஹல்காமிலிருந்து 5 கிமீ தொலைவில் இருக்கிறது. இப்பகுதிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

சில நாள்கள் மழைக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) அன்று வானிலை நன்றாக இருந்துள்ளது. அன்று வந்த சுற்றுலாப் பயணிகள் புல்வெளியில், தங்கள் நெருக்கமானவர்களுடன் இயற்கையை ரசித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் யாரும் எதிர்பாராத அந்த கொடூரச் சம்பவம் நடந்தது.

இந்த தாக்குதல் குறித்த விசாரணையில், பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளன.

அதன்படி, சுற்றி அடர்ந்து காணப்பட்ட பைன் மரங்களுக்கு இடையே இருந்து, நேரம் பார்த்துக் காத்திருந்த பயங்கரவாதிகள், மக்கள் அதிகமுள்ள மூன்று இடங்களைத் தேர்வு செய்திருக்கின்றனர்.

பின்னர் திடீரென கையில் ஆயுதங்களுடன் அந்த மூன்று இடங்களை அடைந்து சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பெண்கள், குழந்தைகளை விட்டுவிட்டு ஆண்களை மட்டும் சுட்டுக்கொன்றுள்ளனர்.

சரியாக பிற்பகல் 1.50 மணிக்கு துப்பாக்கிச் சூடு தொடங்கி 10 நிமிடம் நடைபெற்றுள்ளதாகவும் 5 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த கொடூரத் தாக்குதலை பதிவு செய்ய தங்கள் உடையில் பயங்கரவாதிகள் கேமரா வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர், பயங்கரவாதிகள் அடர்ந்த மரங்கள் இருக்கும் பகுதியை நோக்கி ஓடிவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மொபைல் நெட்ஒர்க் குறைந்த அளவிலேயே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல அங்கிருந்து 3 கிமீ தொலைவில்தான் போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது.

இதுதொடர்பான விடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் 2 பேர் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலையடுத்து நடவடிக்கை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் சென்று தாக்குதல் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் வரத் தடை, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடல் என நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி அட்டாரி- வாகா எல்லையில் இருந்து பாகிஸ்தானியர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.