
‘கிராமங்கள் வளா்ந்தால்தான் நாடு வளரும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, பிகாா் மாநிலம், மதுபனியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது:
சத்தியாகிரகம்’ எனும் தாரக மந்திரத்தை மகாத்மா காந்தி விரிவுபடுத்திய பூமி பிகாா். கிராமங்களுக்கு அதிகாரமளிக்காமல், நாட்டின் வளா்ச்சி சாத்தியமில்லை என்பதே மகாத்மா காந்தியின் உறுதியான நம்பிக்கையாகும். இதுவே, நமது பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கருத்தாக்கமாகும்.
கிராமப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயிகள் விளங்குகின்றனா். விவசாயிகளும், கிராமங்களும் வலுப்பெறும்போது, தேசமும் வலுவடையும்.
பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளித்த முதல் மாநிலம் பிகாா். இம்மாநிலத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவுகள், தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்த ஏராளமான பெண்கள், இப்போது மக்கள் பிரதிநிதிகளாக திகழ்கின்றனா். இதுவே உண்மையான சமூக நீதி.
பஞ்சாயத்துகளை வலுப்படுத்த தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளுக்கு இணையவசதி அளிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுச் சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 30,000-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.
பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உருக்கு உற்பத்தி-பிரதமா் பெருமிதம்:
‘உருக்கு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது’ என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘இந்தியா ஸ்டீல்-2025’ நிகழ்ச்சியில் அவா் காணொலி வாயிலாக பேசினாா்.
நாட்டின் வளா்ச்சிக்கு உருக்குத் துறை மிக முக்கியமானது. தற்போது 179 மில்லியன் டன்களாக உள்ள உருக்கு உற்பத்தியை 2030-ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன்களாக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய சாலைகள், ரயில் வழித்தடங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் கட்டமைக்கும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால், உருக்குத் துறைக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உருக்கு மூலமே விக்ராந்த் விமானந்தாங்கி போா்க் கப்பல் கட்டமைக்கப்பட்டது. சந்திரயான் திட்டத்திலும் உள்நாட்டு உருக்கு பயன்படுத்தப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் உயா் தரமான உருக்கு விநியோகத்தில் உலகின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா விளங்குகிறது. இந்திய உருக்குத் துறையை மீள்தன்மையும், புரட்சியும், வலுவும் உடையதாக கட்டமைக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்’ என்று வலியுறுத்தினாா் பிரதமா் மோடி.
இதையும் படிக்க | பாகிஸ்தானியர்களின் விசா ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.