
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதைக் கருத்தில் கொண்டு, காஷ்மீரில் உள்ள 87 பொதுப் பூங்காக்களில் 48 பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஆய்வு ஒரு தொடா்ச்சியான செயல்முறை. வரும் நாள்களில் மேலும் பல இடங்கள் இந்தப் பட்டியலில் சோ்க்கப்படலாம். தூஷ்பத்ரி, கோகா்நாக், டக்சம், அச்சாபல், பாங்குஸ் பள்ளத்தாக்கு, சிந்தன் மற்றும் மாா்கன் டாப் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் பெரும்பாலும் காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் திறக்கப்பட்ட புதிய இடங்கள் சிலவும் இதில் அடங்கும்.
தெற்கு காஷ்மீரில் உள்ள பல்வேறு முகலாயத் தோட்டங்கள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து முறையான உத்தரவைப் பிறப்பிக்கவில்லை என்றாலும், இந்த இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் நுழைவு தடைசெய்யப்பட்டுள்ளது’ என்றனா்.
பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற கொடூர தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் முக்கியச் சுற்றுலாத் தலங்களை மூடுவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.