
தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் கார்கேவின் இந்த குற்றச்சாட்டு முன்வந்துள்ளது.
அரசியலமைப்பு சவால்கள் என்ற மாநாட்டின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய கார்கே பேசுகையில்,
பிரதமர் மோடி சமூகத்தைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும், புனித ஷ்ரவண மாதத்தில்(ஆடி) முக்கிய பிரச்னைகளில் மௌன விரதம் எடுக்கத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி மற்றும் பாஜக ஆட்சியின் கீழ் அரசியலமைப்பு ஆபத்தில் இருப்பதாகவும், அதைப் பாதுகாப்பது ஒவ்வொரு காங்கிரஸ் தலைவர் மற்றும் தொழிலாளியின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய அரசியலமைப்பு ஒரு சட்ட ஆவணம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் ஆன்மா என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது ஒவ்வொரு இந்தியருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான உரிமையை வழங்குகிறது. ஆனால் இன்று அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது.
அதிகாரத்தில் உள்ள தலைவர்கள் அரசியலமைப்பை மாற்றுவது பற்றி பேசுகிறார்கள். 2024 தேர்தலில் பாஜக 400 இடங்களை வென்றிருந்தால், அவர்கள் அரசியலமைப்பை மாற்றியிருப்பார்கள். ஆனால் இதுதான் நாட்டு மக்களின் பலம், 400 என்று சொன்னவர்களின் முகத்தில் அவர்கள் பலமான அறையைக் கொடுத்தார்கள்.
இது காங்கிரஸின் சாதனை என்றும், அதற்கான பெருமை ராகுல் காந்திக்குச் சொந்தமானது என்றும், அவர் அரசியலமைப்பைக் கைவிடவில்லை, அதைக் காப்பாற்றப் பிரசாரத்தைத் தொடங்கினார் என்றும் அவர் கூறினார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் வாக்காளர்கள் மாற்றப்பட்டனர் என்று குற்றம் சாட்டிய அவர், கர்நாடகத்தில் உள்ள ஒரு பேரவைத் தொகுதியில் வாக்காளர்கள் எவ்வாறு மாற்றப்பட்டனர் என்பதை ராகுல் காந்தி விளக்கியதால், காங்கிரஸிடம் இப்போது ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஒரு சிறிய அறையில் 9 வாக்காளர்களும், மகாராஷ்டிரத்தின் ஒரு விடுதியில் ஒன்பதாயிரம் வாக்காளர்களும் எப்படி இருக்க முடியும்? அப்படியானால் நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும், இது தேர்தல் ஆணையமா அல்லது மோடியின் கைப்பாவையா? கடந்தாண்டு மகாராஷ்டிரம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற வாக்குப்பதிவு புள்ளிவிவரங்கள் குறித்தும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது.
ஆனால் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை "ஆதாரமற்றது" என்று தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. காங்கிரஸ் தனது தொடர்ச்சியான தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாததால் அரசியலமைப்பு அமைப்புகளைத் தாக்குகிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது என்றும் கார்கே குற்றம் சாட்டினார்.
நாட்டு மக்கள் அரசியலமைப்பைப் பாதுகாக்க அவரைத் தேர்ந்தெடுத்தனர், ஆனால் அவர் அதை நசுக்கவே பாடுபடுகிறார். யாராவது அரசியலமைப்பை நசுக்கினால், அது பிரதமரும் பாஜகவும் தான் இருக்கும் என்று அவர் குற்றம் சாட்டினார். மாநாட்டில் கார்கே இவ்வாறு பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.