
மும்பையில் சார்ஜிங் நிலையங்களை டெஸ்லா நிறுவனம் இன்று (ஆக. 4) திறந்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல் விற்பனையகத்தை (ஷோரூம்) டெஸ்லா திறந்த நிலையில், தற்போது முதல் சார்ஜிங் நிலையத்தையும் அமைத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க், தனக்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் வகையில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி தனது முதல் விற்பனையகத்தைத் தொடங்கினார்.
மும்பையில் முதல் விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாடல் ஒய் என்ற காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 59.89 லட்சம்.
இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச இறக்குமதி வரி காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் வராமல் இருந்தன. தற்போது வரியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், சீனாவிலுள்ள டெஸ்லா ஆலையில் இருந்து கார்கள் இறக்குமதியாகின்றன.
உலகில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் டெஸ்லாவின் மாடல் ஒய் காரானது, இந்தியாவில் இரு வேறு வேரியன்ட்களில் (ரூ. 59.89 லட்சம் மற்றும் ரூ.67.89 லட்சம்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் டெஸ்லா கார்களின் விற்பனை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தனது மின்னணு கார்களுக்கான சார்ஜிங் நிலையத்தையும் டெஸ்லா இன்று திறந்துள்ளது. முதல் நிலையமானது மும்பையிலுள்ள பாந்த்ரா - குர்லா வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் காலாண்டிற்குள் லோவேர் பேரல், தாணே, நவி மும்பை ஆகிய பகுதிகளில் சார்ஜ் செய்யும் நிலையங்களைத் திறக்கவுள்ளது. ஒவ்வொரு நிலையத்திலும் ஒரே நேரத்தில் 4 கார்களை சார்ஜ் செய்யலாம் என டெஸ்லா தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.