அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால், நாட்டின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும் என இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், துரதிருஷ்டவசமானது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா இன்று அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% வரி விதித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள இந்த 50% வரியால், நாட்டின் ஏற்றுமதி 55% பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் பொருள்கள், ஜவுளித் துறை பொருள்கள், தோல் பொருள்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான வணிகம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேச நலனை பாதுகாக்க நடவடிக்கை
அமெரிக்கா வரி விதிப்புக்கு மத்தியில், தேச நலனை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமெரிக்காவின் வரி உயர்வு குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது என்றும், 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாக ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. கச்சா எண்ணெய் பெற்றுக்கொண்டு ரஷியாவுக்கு இந்தியா அளிக்கும் நிதியானது உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டி, இதனை இந்தியா நிறுத்துவதற்கு கெடு விதித்திருந்தார்.
ரஷியாவிடமிருந்து எண்ணெய் பெறுவது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றங்களையும் அறிவிக்கவில்லை. இதனிடையே, இந்தியாவுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% வரியை இன்று டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி 50% ஆக அதிகரித்துள்ளது. இது, இந்திய ஏற்றுமதியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.