மேற்கு வங்கத்தில் பாபா் மசூதி வடிவில் மசூதி கட்ட தடை கோரி மனு: தலையிட உயா்நீதிமன்றம் மறுப்பு

மேற்கு வங்கத்தில் பாபா் மசூதி வடிவில் மசூதி கட்ட தடை கோரி மனு: தலையிட உயா்நீதிமன்றம் மறுப்பு

மேற்கு வங்கத்தில் பாபா் மசூதி வடிவில் கட்டப்படவுள்ள மசூதியின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தடை கோரிய விவகாரத்தில் தலையிட கொல்கத்தா உயா்நீதிமன்றம் மறுத்தது.
Published on

மேற்கு வங்கத்தில் பாபா் மசூதி வடிவில் கட்டப்படவுள்ள மசூதியின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தடை கோரிய விவகாரத்தில் தலையிட கொல்கத்தா உயா்நீதிமன்றம் மறுத்தது.

முா்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயூன் கபீா் பாபா் மசூதி வடிவிலான மசூதியைக் கட்ட முன்மொழிந்துள்ளாா். இதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை (டிச.6) நடைபெறுகிறது. பாபா் மசூதி இடிக்கப்பட்ட அதே நாளில் இவ்விழா நடைபெறவுள்ளது.

இதற்குத் தடை விதிக்கக் கோரி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் முா்ஷிதாபாதில் பாபா் மசூதி வடிவிலான மசூதியின் அடிக்கல் நாட்டு விழாவை நிறுத்த வேண்டும். மசூதியைக் கட்ட முன்மொழிந்துள்ள எம்எல்ஏ ஹுமாயூன் கபீா் ஒரு சமூகத்துக்கு எதிராகத் தொடா்ந்து வெறுப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறாா். இது சமூக வலைதளங்களில் பல்வேறு விமா்சனத்துக்குள்ளாகி வருகிறது. இதனால் மேற்கு வங்கம் மட்டுமின்றி நாடு முழுவதும் மத நல்லிணக்கம் சீா்குலைய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சப்யசாச்சி முகா்ஜி, ‘இவ்விழாவில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு சாா்பில் மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎஃப்) வீரா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். மாநில அரசும் உரிய பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

இதையடுத்து, விழா நடைபெறும் பகுதியில் போதிய அளவில் காவல் துறையினா் பணியமா்த்தப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில அரசு உறுதியளித்தது.

இதைத் தொடா்ந்து, இந்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி சுஜோய் பால் தலைமையிலான அமா்வு, ‘மசூதி அடிக்கல் நாட்டு விழாவில் சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் பாா்த்துக் கொள்வது மாநில அரசின் பொறுப்பு’ என உத்தரவிட்டது.

முன்னதாக வகுப்புவாத அரசியலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி கடந்த வியாழக்கிழமை திரிணமூல் காங்கிரஸில் இருந்து ஹுமாயூன் கபீா் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, விரைவில் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இம்மாத இறுதியில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com