

நாட்டில் விமான சேவை பாதிப்பால் இந்திய ரயில்வே சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இண்டிகோ விமான சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கான புதிய ஓய்வு விதிகளை நிறுத்திவைப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) அறிவித்துள்ளது.
விமானிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் கட்டாய ஓய்வு விதியால் , இண்டிகோ விமான நிறுவனத்தில் ஊழியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டு கடந்த சில நாள்களாக விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று அனைத்துப் பகுதிகளிலும் பெரும்பாலான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் டிஜிசிஏ புதிய விதிகளை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
இன்றும் பெரும்பாலான நகரங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் விமான சேவை பாதிப்பால் பலரும் ரயில்களை நாடி வருகின்றனர். இதனால் சில குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இண்டிகோ விமான சேவை பாதிப்பால் பயணிகளுக்கு இந்திய ரயில்வே மாற்று போக்குவரத்தை வழங்க முன்வந்துள்ளது. அதன்படி கீழ்குறிப்பிட்ட 7 முக்கிய ரயில்களில் கூடுதலாக ஒரு ஏசி(3 tier AC) பெட்டி இணைக்கப்படவுள்ளது.
1. டிசம்பர் 6 முதல் திருச்சிராப்பள்ளி - ஜோத்பூர் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் (20482).
2. டிசம்பர் 10 முதல் ஜோத்பூர் - திருச்சிராப்பள்ளி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ்(20481).
3. டிசம்பர் 6 முதல் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12695)
4. டிசம்பர் 7 முதல் திருவனந்தபுரம் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12696)
5. டிசம்பர் 6 முதல் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12601)
6. டிசம்பர் 6 முதல் சென்னை கடற்கரை - மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்(22158)
7. டிசம்பர் 7 முதல் மும்பை சிஎஸ்டி - சென்னை கடற்கரை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்(22157)
இந்த ரயில்களில் தற்காலிகமாக ஒரு ஏசி கூடுதலாக இணைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் கூட்ட நெரிசலை சமாளிக்க செகந்திராபாத் - சென்னை எழும்பூர் இடையே டிச. 6, 7 தேதிகளில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் ரயில்(07146) டிச. 7 ஆம் தேதி காலை 8 மணிக்கு எழும்பூரை அடையும்.
அதேபோல மறுவழியில், சென்னை எழும்பூரில் இருந்து டிச. 7 பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு (07147) டிச. 8 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு செகந்திரபாத்தை அடையும்.
அதேபோல பெங்களூரு - சென்னை எழும்பூர் இடையே டிச. 7, 8 தேதிகளில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 7 ஆம் தேதி காலை 8.05 மணிக்கு பெங்களுருவில் இருந்து புறப்படும் ரயில்(06255) டிச. 7 பிற்பகல் 2.45 மணிக்கு எழும்பூரை அடையும்.
அதேபோல மறுவழியில், சென்னை எழும்பூரில் இருந்து டிச. 7 பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு (06256) அன்று இரவு 10.45 மணிக்கு பெங்களூருவை அடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.