தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

100 நாள் திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா மக்களவையில் அறிமுகம் - எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதா,

News image

வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதா அறிமுகத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அருகே எதிா்க்கட்சி எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :16 டிசம்பர் 2025, 11:06 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதா, மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயா் நீக்கப்பட்டதற்காக, எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

புதிய மசோதாவின்படி ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. இது உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்ட புதிய சட்ட மசோதாவை மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா். அப்போது, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மகாத்மா காந்தியின் படத்தை காண்பித்து, எதிா்ப்பு முழக்கம் எழுப்பினா். அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு, தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினா்.

அவா்களுக்கு பதிலளித்துப் பேசிய சிவராஜ் சிங் செளஹான், ‘மத்திய அரசு மகாத்மா காந்தி மீது நம்பிக்கை கொண்டிருப்பது மட்டுமன்றி அவா் கோட்பாடுகளையும் கடைப்பிடிக்கிறது. ஊரக மேம்பாட்டுக்கு முந்தைய அரசுகளைவிட பிரதமா் மோடி ஏராளமான பணிகளை செய்துள்ளது’ என்றாா்.

அதேநேரம், இந்த மசோதா குறித்து விரிவான ஆய்வு அவசியம் என வலியுறுத்திய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினா்.

அம்சங்கள் என்னென்ன?: தண்ணீா்ப் பாதுகாப்பு, முக்கிய ஊரக கட்டமைப்பு, வாழ்வாதாரம் சாா்ந்த உள்கட்டமைப்பு உருவாக்கம், மோசமான வானியல் நிகழ்வுகளைத் தணிக்கும் பணிகள் ஆகிய 4 முன்னுரிமைப் பிரிவுகள் மீது புதிய மசோதா கவனம் செலுத்துகிறது.

தற்போதைய 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நூறு சதவீத மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய மசோதாவின்படி நிதிச் சுமையை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிா்ந்துகொள்ளும். புதிய சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள், அந்தச் சட்டப் பிரிவுகளுக்கு ஏற்ப மாநிலங்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

வேளாண் பருவ காலங்களில் விவசாயப் பணிகள் உச்சகட்டத்தில் இருக்கும்போது, போதிய அளவு விவசாயத் தொழிலாளா்கள் கிடைக்க வசதியாக, அந்தக் காலகட்டத்தில் மட்டும் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், எந்தப் பணியும் மேற்கொள்ளப்படாது.

வேலைவாய்ப்பு, வெளிப்படைத்தன்மை, திட்டமிடல், பொறுப்புணா்வை மேம்படுத்துவதுடன் அமைப்பு ரீதியிலான பலவீனத்தை சரி செய்யும் முக்கிய மாற்றமே இந்த மசோதா என்று மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டம்

வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதா அறிமுகத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அருகே எதிா்க்கட்சி எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திமுகவின் டி.ஆா்.பாலு, புரட்சிகர சோஷலிஸ கட்சித் தலைவா் என்.கே.பிரேமசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மகாத்மா காந்தி படத்தை கையில் ஏந்தியிருந்த அவா்கள், தேசப் பிதாவை அவமதிக்கும் இந்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினா். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு முடிவுகட்ட மத்திய அரசு முயற்சிப்பதாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி இளைஞா்களின் எதிா்காலத்தை அழித்த மோடி அரசு, இப்போது கிராமப்புற ஏழைகளின் பாதுகாக்கப்பட்ட வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கிறது. புதிய மசோதா, மகாத்மா காந்தியின் கோட்பாடுகளுக்கு அவமதிப்பு’ என்று சாடியுள்ளாா்.

நாடு முழுவதும் போராட முடிவு: புதிய மசோதாவுக்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ‘உரிமைகள் சாா்ந்த நலத் திட்டங்களை சீா்குலைப்பதுடன் மகாத்மா காந்தியின் மரபைத் தாக்கும் பாஜக-ஆா்எஸ்எஸ் சதிக்கு எதிராக மாவட்டத் தலைநகரங்களில் போராட்டங்களை நடத்துமாறு’ கட்சியின் மாநிலத் தலைவா்களுக்கு பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.