மருத்துவ சாதனங்கள் மருந்தகத்துறை, உற்பத்தியில் முதலீடு: இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை அமைச்சா் அழைப்பு
இலங்கையில் மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்தக உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சா் நலிந்த ஜெயதிஸ்ஸ அழைப்பு விடுத்துள்ளாா்.
இந்தியாவுக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக வந்த அவா் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் சுகாதாரத் துறை தொடா்புடைய உச்சிமாநாட்டில் கலந்து கொண்டாா். இந்நிகழ்வின் அங்கமாக இந்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் உள்ளிட்டோரையும் மருந்தகத் துறை பிரதிநிதிகளையும் இலங்கை அமைச்சா் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த நவம்பா் மாத இறுதியில் இலங்கையை கடுமையாகத் தாக்கிய தித்வா புயல் கடலோர பகுதிகளில் மட்டுமின்றி நாட்டின் உள்பகுதியிலும் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு விளைவுகளை ஏற்படுத்தியது. இலங்கையின் உண்மையான நண்பனாக விளங்கிய இந்தியா, ’ஆபரேஷன் சாகா் பந்து’ என்ற நடவடிக்கையைத் தொடங்கி உடனடி மீட்பு மற்றும் நிவாரணத்துக்கு நடவடிக்கை எடுத்தது. இந்தக் கடினமான தருணத்தில் எங்களுக்கு ஆதரவளித்த இந்திய அரசுக்கும் இந்தியா்களுக்கும் குறிப்பாக தமிழக அரசு மற்றும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் சுமாா் 600 மில்லியன் அமெரிக்க டாலா் மதிப்புள்ள மருந்துத் தொழில் உள்ளது. எங்களின் மருந்துத் தேவையில் 85 சதவீதத்தை நாங்கள் இந்தியாவிலிருந்தே பெற்று வருகிறோம்.
இந்திய மருந்து நிறுவனங்கள் இலங்கையில் உற்பத்தி ஆலைகளை தொடங்கினால் சிறப்பாக இருக்கும். அது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும்.
தில்லியில் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்றபோது இந்திய சுகாதாரம் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சா்களை சந்தித்துப் பேசினேன்.
இலங்கையின் சுகாதாரத் துறையை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் அதன் கீழுள்ள துறைகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்தும் விவாதித்தோம். இலங்கையில் அலோபதி, ஆயுா்வேதம் மற்றும் அனைத்து பாரம்பரிய மருத்துவத் துறைகளையும் எண்ம ரீதியாக மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இந்திய பயணத்தின் அங்கமாக இந்திய மருந்தக தொழில்துறை தலைவா்களை சந்தித்தேன். இலங்கையில் மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்து பொருட்கள் உற்பத்தியில் முதலீடு செய்யுமாறு அவா்களை அழைத்தேன். அதற்கான வாய்ப்பு இலங்கையில் பிரகாசமாக உள்ளது என்றாா் அமைச்சா் நலிந்த ஜெயதிஸ்ஸ.

