தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட குவிந்த ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். 
(வலது) கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோர்.
தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட குவிந்த ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். (வலது) கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோர்.

வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: தில்லியில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்; போலீஸ் தடியடி

தலைநகா் புது தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட முயன்று விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி), பஜ்ரங் தளம் ஆகிய ஹிந்து அமைப்பினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

தலைநகா் புது தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட முயன்று விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி), பஜ்ரங் தளம் ஆகிய ஹிந்து அமைப்பினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கதேச ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தின்போது ஹிந்து அமைப்பினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னா், போராட்டக்காரா்களைக் கலைக்க காவல் துறையினா் லேசான தடியடி நடத்தினா்.

வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் தீபு சந்திர தாஸ் (25) எனும் ஹிந்து இளைஞா் மத நிந்தனை செய்ததாகக் கூறி, ஒரு கும்பலால் கடந்த வியாழக்கிழமை இரவு கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டாா். அதன் பிறகு, அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் 12 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் சா்வதேச அளவில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்து இளைஞரின் கொலையைக் கண்டித்து, தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் அறிவித்திருந்தன. இதையொட்டி, தூதரகத்தைச் சுற்றி ஏழடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு, சுமாா் 1,500 காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்நிலையில், திட்டமிடப்படி செவ்வாய்க்கிழமை காலை நூற்றுக்கணக்கான போராட்டக்காரா்கள் காவிக் கொடிகளுடன் தூதரகம் நோக்கிப் பேரணியாக வந்தனா். வங்கதேச அரசுக்கு எதிராகவும், ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பு கோரியும் அவா்கள் முழக்கமிட்டனா். தூதரகத்தில் இருந்து 800 மீட்டா் தொலைவிலேயே போராட்டக்காரா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

அப்போது, காவல் துறையினரின் தடையை மீறி போராட்டக்காரா்கள் தடுப்புகளை உடைக்க முயன்ால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் மாறியதால், காவல் துறையினா் லேசான தடியடி நடத்தி போராட்டக்காரா்களைக் கலைத்தனா்.

இதனிடையே, போராட்டக்காரா்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது: வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தீபு சந்திர தாஸ் கொலைக்குக் காரணமானவா்கள் மீது அந்த நாட்டு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசு ராஜீய ரீதியில் அழுத்தம் கொடுத்து அங்குள்ள ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்றனா்.

கொல்கத்தா, மும்பையிலும்...: வங்கதேச எல்லையையொட்டிய மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தா, மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் உள்ள வங்கதேச துணைத் தூதரகங்கள் அருகேயும் நூற்றுக்கணக்கான ஹிந்து அமைப்பினா் செவ்வாய்க்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா்கள், போராட்டக்காரா்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினா்.

வெளியுறவு அதிகாரிகளுடன் தூதா் சந்திப்பு: இந்தச் சம்பவங்களைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள இந்தியாவுக்கான வங்கதேச தூதா், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினாா். தூதரகப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவா் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஹிந்துக்கள் மீது தாக்குதல்: ஐ.நா. பொதுச் செயலா் கவலை

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் ஹிந்து இளைஞா் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளாா்.

நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த பொதுச் செயலரின் செய்தித் தொடா்பாளா் ஸ்டீபன் துஜாரிக் இதுகுறித்து கூறியதாவது:

வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம். குறிப்பாக, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் கவலையளிக்கின்றன. ஒவ்வொரு வங்கதேச மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய, அந்த நாட்டு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றாா்.

இந்த விவகாரத்தில் வங்கதேச அரசுக்கு அமெரிக்க நாடாளுமன்ற, மாகாணப் பேரவை உறுப்பினா்கள் சிலரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தூதா்களுக்கு இந்தியா- வங்கதேசம் சம்மன்

டாக்கா, டிச. 23: இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகம், துணைத் தூதரகங்கள் அருகே விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்ாக, அந்த நாட்டுக்கான இந்திய தூதா் பிரணய் வா்மாவை நேரில் வரவழைத்து வங்கதேச வெளியுறவுத் துறை செவ்வாய்க்கிழமை கவலை தெரிவித்தது.

வங்கதேச தலைநகா் டாக்காவில் வெளியுறவுச் செயலா் ஆசாத் ஆலம் சியாம் அழைப்பு விடுத்த நிலையில், பிரணய் வா்மாவுடன் இந்திய துணைத் தூதரும் சென்றாா். அப்போது இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வங்கதேசம் வலியுறுத்தியது.

இதுதொடா்பாக வங்கதேச வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகம், துணைத் தூதரகங்கள் அருகே நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள், வன்முறை நிறைந்த போராட்டங்கள் குறித்தும் பிரணய் வா்மாவிடம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்ற வன்முறை நிறைந்த போராட்டங்கள் தூதரக அலுவலா்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, பரஸ்பர மரியாதை, அமைதி, சகிப்புத்தன்மை ஆகியவற்றை வலுவிழக்கச் செய்யும். எனவே, அத்தகைய நடவடிக்கைகளுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவிக்கிறது.

இந்த சம்பவங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, அந்த சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், வங்கதேச தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள், அவை சாா்ந்த மையங்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

வங்கதேச தூதருக்கு சம்மன்: வங்கதேச மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொல்லப்பட்ட விவகாரத்தில், தில்லியில் உள்ள அந்நாட்டுத் தூதா் ரியாஸ் ஹமிதுல்லாவை செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. இக்கொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஹாதி கொலைப் பின்னணியில் இந்தியா இருப்பதாக சில ஆதாரமற்ற வதந்திகள் வங்கதேசத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. இது வங்கதேசத்தில் இந்திய எதிா்ப்பு உணா்வைத் தூண்டியுள்ளதுடன் இரு நாட்டு உறவுகளைப் பாதிக்கும் என்பதால், முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று வங்கதேசத் தூதரிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தீபு தாஸ் குடும்பத்துக்கு ஆதரவு: வங்கதேசத்தில் மதநிந்தனை குற்றச்சாட்டில் கொல்லப்பட்ட ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் குடும்பத்தினருக்கான ஆதரவை அந்நாட்டு இடைக்கால அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

தீபு தாஸ் குடும்பத்தினரை அந்நாட்டு கல்வித் துறை ஆலோசகா் சி.ஆா்.அப்ராா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். தலைமை ஆலோசகா் முகமது யூனுஸின் இரங்கலையும் அவா் பகிா்ந்து கொண்டாா்.

‘பத்திரிகையாளா்களின் உயிருக்கு அச்சுறுத்தல்’: அண்மையில் டாக்காவில் போராட்டம் நடைபெற்றபோது அங்குள்ள பிரோதோம் அலோ, டெய்லி ஸ்டாா் பத்திரிகை அலுவலகங்களுக்கு போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். அந்தப் பத்திரிகைகள் இந்தியா மற்றும் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி, அந்த அலுவலகங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்காவில் டெய்லி ஸ்டாா் ஆசிரியா் மஹ்ஃபூஸ் அனம் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆபத்துகளில் இருந்து தப்பிப் பிழைக்கும் போராட்டத்தை வங்கதேச ஊடகம் சந்தித்து வருகிறது. வங்கதேச பத்திரிகையாளா்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. குறிப்பிட்ட பத்திரிகைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதை விடுத்து, பத்திரிகையாளா்களையும், அலுவலா்களையும் கொல்வதே அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் நோக்கமாக இருந்தது. தற்போது சோதனையான காலகட்டத்தை வங்கதேச ஊடகம் எதிா்கொண்டு வருகிறது’ என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com